ஆம்ஸ்டர்டாம்:
ஆய்வக பரிசோதனையில், எய்ட்ஸ் நோய்க்கு காரணமான வைரஸ் அழிப்பு உறுதியானதில், விரைவில் எய்ட்ஸை அடியோடு ஒழிக்க இயலும் என்ற நம்பிக்கை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.
அண்மையில் சுனாமியாக உருவெடுத்து உலகெங்கும் கொத்துக்கொத்தாக மனித உயிர்களைக் கொன்றொழித்த கொரோனாவுக்கு விரைந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வெற்றிகரமான பயன்பாட்டினால், அதே வேகத்தில் கொரோனா பாதிப்பிலிரிந்து உலகம் மீளவும் முடிந்தது. ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோய்க்கு விடிவு கண்டபாடில்லை. அந்தளவுக்கு நவீன மருத்துவ அறிவியலுக்கு ஹெஐவி தொற்று சவாலாக நிலவியது.
40 ஆண்டுகளுக்கு முன்னர் எய்ட்ஸ் அடையாளம் காணப்பட்டபோது உலகெங்கும் பெரும் பீதி கிளம்பியது. முறையற்ற உடலுறவே எய்ட்ஸ் நோய் பரவலுக்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்ததும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளால் எய்ட்ஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. பாலுறவு வாயிலாக எய்ட்ஸ் நோய் ஏற்படுவதை தடுக்கலாம், தவிர்க்கலாம் என்றதும் பாதுகாப்பு கவசங்களான ஆண் – பெண் உறைகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்தது.
ஆனால் பாலுறவுக்கு அப்பால், போதை மருந்து உபயோகம் உட்பட சுத்தம் செய்யப்படாத ஊசியை பகிர்ந்து கொள்வது, பரிசோதிக்கப்படாத ரத்தத்தை ஏற்றுவது, எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களினாலும் எய்ட்ஸ் பரவல் நீடித்து நிலைகொண்டது. எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டறிவதில் பெரும் சுணக்கம் தொடர்கிறது. 40 வருடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த இழுபறிக்கு இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தை சேர்ந்த வல்லுநர்கள் தங்களது ஆய்வக பரிசோதனைகளின்போது, ஹெச்ஐவி பாதித்த செல்களில் இருந்து, நோய்க்கு காரணமான வைரஸை வேரறுத்ததாக பறைசாற்றி உள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய மருத்துவ செயல்முறையை ’கிரிஸ்பர்’ என்ற சொல்லால் குறிக்கின்றனர். கத்திரிக்கோல் கொண்டு ஒரு ரிப்பனின் தேவையில்லாத பகுதியை நறுக்கி எறிவதற்கு ஒப்பான மருத்துவ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட என்சைம்களைப் பயன்படுத்தி, டிஎன்ஏ இழைகளில் வேண்டாத பகுதியை நறுக்குகிறார்கள்.
ஆய்வின் தலைவரான டாக்டர் எலினா ஹெர்ரெராகரில்லோ கூற்றுப்படி, இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் குறிப்பிட்ட வைரஸை கண்டறிந்து அழிக்க இயலும். நோயாளியின் மரபணுக்களில் தன்னை உட்பொதித்துக்கொள்வதோடு, எளிதில் கண்டறிய இயலாத வகையில் ஒளிந்துகொள்ளும் வைரஸ், ஹெச்ஐவி குணப்படுத்தலில் மிகப்பெரும் சவாலாக உள்ளது. மேற்படி ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பம் மூலம் எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமான டிஎன்ஏ இழை பாதிப்புகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற இயலும்.
Crispr-Cas9 என்றழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் ஆய்வக பரிசோதனைக்கு அப்பால் நடைமுறையில் பயனாகும்போது எய்ட்ஸ் மட்டுமன்றி புற்றுநோய், டிமென்ஷியா, பிறவி பார்வைக் குறைபாடு மற்றும் வம்சாவளியாக தொடரும் பல்வேறு நோய்களிலும் விரைவில் தீர்வு காண இயலும் என, ஆய்வில் ஈடுபட்ட மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.