போலி விசா முத்திரைகளை தயாரித்ததாக நம்பப்படும் இரு வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் பாரு:

நாட்டில் அதிக காலம் தங்கியிருப்பவர்களுக்கு சட்டவிரோதமாக உதவுவதற்காக போலி விசா முத்திரைகளை தயாரித்ததாக நம்பப்படும் இரு வெளிநாட்டவர்கள் குடிநுழைவு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24), இங்குள்ள பாங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (PSI) சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்திற்கு அருகே, மாலை 6 மணியளவில், இரண்டு சந்தேக நபர்களும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று ஜோகூர் குடிநுழைவு துறை இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் மலேசியாவில் ஆவணமின்றி அதிக காலம் தங்கியிருந்த வெளிநாட்டினர் அல்லது அவர்களது பணி அனுமதியைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள வெளிநாட்டினருக்கு போலி விசா முத்திரைகளை தயாரித்தது விற்பனை செய்ததாக நம்பப்படுகிறது.

“இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தானிய சந்தேக நபர் ஒரு காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தார், அதே நேரத்தில் இந்திய நாட்டவர் அவருக்கு அருகில் இருந்தார். அவர்கள் இருந்த கார் PSI டாக்ஸி ஸ்டாண்டில் நின்றது என்றும் , அவர்கள் தங்களது வாடிக்கையாளருக்காக காத்திருப்பது போல் தெரிகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

“30 மற்றும் 35 வயதுடைய சந்தேக நபர்களை கைது செய்த பிறகு, அவர்களிடமிருந்து ஐந்து இந்திய பாஸ்போர்ட்கள், ஆறு பாகிஸ்தான் பாஸ்போர்ட்கள், RM3,455.50 மற்றும் RM474.45 மதிப்புள்ள பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தோம்,” என்று இன்று (மார்ச் 27) மாநில குடிநுழைவு துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இவர்கள் சட்டவிரோத சேவைகளுக்காக சுமார் RM650 முதல் RM3,000 வரை வசூலித்ததாக பஹாருதீன் கூறினார்.

மேலும் சந்தேகநபர்கள் வசம் உள்ள பாஸ்போர்ட்கள் செல்லுபடியாகும் என்று தெரிகிறது, இருப்பினும் அவர்களின் ஆவணங்கள் மற்றும் முத்திரைகளின் நம்பகத்தன்மையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று அவர் சொன்னார்.

மேலும் இந்த வழக்கில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அல்லது அதன் பணியாளர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை தமது துறை ஆராயும் என்றும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 56(1)(l) இன் கீழ் போலியான சமூக வருகை அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தியதற்காக அல்லது வைத்திருந்ததற்காகவும், அதே சட்டத்தின் பிரிவு 12(1)(f) இன் கீழ் சரியான காரணமின்றி மற்றவர்களின் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்களை வைத்திருந்ததற்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here