ஜோகூர் பாருவில் லோரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கியதாகக் கூறி மூன்று போலீசார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று சந்தேக நபர்களும் 36 முதல் 42 வயதுடையவர்கள் என்றும், புதன்கிழமை (மார்ச் 27) மாலை 7 மணியளவில் ஜோகூர் எம்ஏசிசி அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.
சந்தேக நபர்கள் மெர்சிங் பகுதியில் உள்ள செம்பனை மற்றும் உர லோரி ஓட்டுனர்களிடம் இருந்து 7,800 ரிங்கி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987இன் கீழ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குத் தூண்டுதலாகச் சந்தேக நபர்கள் கடந்த ஆண்டு நவம்பரில் பணத்தைப் பெற்றதாகத் தெரிகிறது என்று வியாழக்கிழமை (மார்ச் 28) ஒரு வட்டாரம் தெரிவித்தது.
ஜோகூர் எம்ஏசிசி இயக்குநர் டத்தோ ஆஸ்மி அலியாஸைத் தொடர்பு கொண்டபோது, எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17 ஏ கீழ் விசாரணைக்காக மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினார். சந்தேக நபர்கள் வியாழக்கிழமை காலை விளக்கமறியலில் வைக்க உத்தரவைப் பெறுவதற்காக இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









