அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பிற்காக சென்ற இந்தியாவின் ஹைதரபாத் நகரை சேர்ந்த 25 வயது முகமது அப்துல் அர்ஃபாத் என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகமது அப்துல் அர்ஃபாத் கடத்தப்பட்டார். அவரது பெற்றோரிடம் 1200 டாலரை பிணய தொகையாக கேட்ட அவர்கள் அதை எவ்வாறு செலுத்துவது என்பதற்கான வழிமுறையை தெரியப்படுத்தவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அதனுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தேடுதல் பணி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் க்ளீவ்லாண்டின் ஓஹியோவில் முகமது அப்துல் அர்ஃபாத்-ன் இறந்த உடல் கண்டறியப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். முகமது அப்துல் அர்ஃபாத்-ன் மரணம் குறித்த முழுமையான விசாரணையை உறுதி செய்வது குறித்து உள்ளூர் காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம் எனப் பதிவிட்டுள்ளனர்.