கேன்டிடேட் செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.

ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சக நாட்டவர் விதித் குஜராத்தியை எதிர்கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 45ஆவது நகர்த்தலில் குஜராத்தியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார். மற்ற 3 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இதில் இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா இடையிலான ஆட்டம் 29ஆவது காய் நகர்த்தலில் டிரா ஆனதும் அடங்கும்.

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனையும் பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி, பல்கேரியாவின் நுர்க்யுல் சலிமோவாவை சந்தித்தார். வெள்ளைநிற காய்களுடன் களம் கண்ட வைஷாலி 31ஆவது நகர்த்தலில் சலிமோவாவை சாய்த்தார். ஏற்கனவே ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டிருந்த வைஷாலிக்கு இது முதலாவது வெற்றியாகும். மற்ற 3 ஆட்டங்களும் டிரா ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here