பி.ஆர்.ராஜன்
அண்மைக் காலமாக நாட்டில் இனத்துவேஷம் அதிகமாகவே தலைதூக்கியிருக்கிறது. ஒரு சமயத்தை இழிவுபடுத்துவது, ஒரு மதத்தவரின் சமய நம்பிக்கையை அசிங்கப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன.
இந்த இனத்துவேஷ – சமயங்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு நான்காண்டுகளுக்கு பின்னோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது தங்களுடைய இந்த ஈனச்செயல் எவ்வளவு கேவலமானது என்பது தெளிவாகப் புரியும்.
நான்காண்டுகளுக்கு முன் நாட்டில் கோவிட்–19 கொடிய தொற்றுப் பரவல் பந்தாடியது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் மரணமுற்றனர். நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வீதிகள் வெறிச்சோடின. பள்ளிகள் மூடப்பட்டன. தொழில்துறைகள் முடங்கின.
மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். மயான அமைதி மக்களை நிறையவே சித்திரவதை செய்தது. மனதளவிலும் உடல் ரீதியிலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
உணவுப் பொருட்கள், மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் அல்லாடினர். ஒரு வேளை சாப்பாட்டுக்கு மக்கள் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தது இதயங்களை நொறுக்குவதாக இருந்தது.
இந்தக் கொடிய தொற்றுப் பரவல் காலத்திலும் நமக்கு மிகப் பெரிய ஆறுதலைத் தந்தது மலேசியர்கள் மலேசியர்களாக வாழ்ந்ததுதான். அந்தத் தருணங்களை ஜென்மத்திலும் மறக்க முடியாது.
மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள், சபா– சரவாக்கியர்கள் தங்களது இனங்களையும் சமய நம்பிக்கைகளையும் நிறத்தையும் மறந்து மலேசியர்களாகக் களமிறங்கி மக்களின் பசிப் போக்கியது இன்றளவும் நம் நினைவில் திரைக்காட்சிபோல் ஓடிக் கொண்டிருக்கிறது.
தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதை மலேசியர்கள் கற்றுக் கொண்டனர். கோடீஸ்வரர்களிலிருந்து அன்றாடக் காய்ச்சிகள் வரை யாரையும் விட்டு வைக்காமல் உணவுகளையும் மருந்து மாத்திரைகளையும் மலேசியர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகித்ததை இன்று நினைத்துப் பார்த்தாலும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
வேலை இழந்து, வருமானம் இழந்து வாழ்வாதாரத்திற்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள்கூட சக மனிதர்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து உதவிகள் வழங்கியது மனிதத்தின் உச்சமாக இருந்தது.
உயிர்க்கொல்லியான கொடிய தொற்றையும் பொருட்படுத்தாமல் முகக் கவசங்களை அணிந்து கொண்டு மாடி வீடுகளுக்கும் சென்று கதவைத் தட்டி உணவளித்து பசி போக்கியது அன்று ஒரு தெய்வச் செயலாகவே பார்க்கப்பட்டது.
அந்தச் சமயத்தில் மலாய்க்காரர்கள் இது இந்தியர் தந்த சாப்பாடு, சீனர் தந்த உணவு என்று பார்க்கவில்லை. அன்போடு பெற்றுக்கொண்டனர். அதேபோன்று சீனர்களும் இந்தியர்களும் பரஸ்பர நட்புறவோடு உணவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சீக்கிய நண்பர்களும் சீக்கிய ஆலயங்களில் சிறப்பு சமையல் கூடங்களை அமைத்து அந்தச் சமுதாயம் ஒன்றுபட்டு சமைத்து, உணவுகளை விநியோகம் செய்ததையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு மளிகைச் சாமான்கள் உட்பட நிதியும் வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் மாவட்டம், மாநில எல்லைகள் மூடப்பட்டாலும் மனிதர்களின் இதயக்கதவுகள் துன்பப்படுவோருக்கு திறந்தே இருந்தன.
அனைத்து இன மலேசியர்களுக்கு அன்று இவர்களெல்லாம் தெய்வம்போல் தோன்றினர். மனக்கசப்பு கிடையாது. கசப்பு வார்த்தைகள் கிடையாது. நெஞ்சைப் பிளக்கும் இனத்துவேஷ சொல்லாடல்கள் கிடையாது. மனிதம் நிறைந்தவர்களாக மட்டுமே அன்று மலேசியர்கள் வாழ்ந்தனர். சக மலேசியர்களுக்கு பசிபோக்கி உயிர் தந்தனர்.
ஆனால், உயிர்க்கொல்லியான கோவிட்–19 தொற்றுப் பரவலைக் காட்டிலும் கொடிய ஒரு தொற்றாக இனத்துவேஷமும் சமயங்களை இழிவுபடுத்துவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னை அடைத்துக்கொண்டிருக்கும் ஒரு கும்பல் இதில் தீவிரம் காட்டி வருகிறது.
தங்களுடைய விஷமத்தனப் பேச்சால், கசப்பை விதைக்கும் உரைகளால் மலேசியர்களின் இதயங்களைப் பிளக்கத் தொடங்கியிருக்கின்றனர். நமக்கு இப்போதைக்கு உடனடியாகத் தேவை ஒற்றுமை எனும் மருந்து மட்டுமே. சமய நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் நமது காயங்களுக்கு மருந்தாகட்டும்.