ஜெகன்மோகன் தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை இணைந்த கூட்டணி மற்றும் ஜெகன் மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன், “நாங்கள் அனைவரும் தயார்” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் பேருந்து மூலம் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு விஜயவாடாவில் வாக்கு சேகரித்த ஜெகன் மோகனுக்கு கட்சியினர், கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்தனர். அப்போது ஜெகன் மோகனை நோக்கி திடீரென கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஜெகன் மோகனின் நெற்றியில் இடது புருவத்தின் மேலே சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக ஜெகன் மோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஜெகன் மோகனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ. ஒருவரும் காயமடைந்தார். கல்வீச்சில் காயமடைந்த பின்னரும், சிகிச்சைக்குப் பிறகு அங்கு வாக்கு சேகரித்த ஜெகன் மோகன் தொடர்ந்து பயணத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே, ஜெகன் மோகன் மீதான இந்த தாக்குதல், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுவின் ஏற்பாட்டில் நடந்திருப்பதாக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஜெகன் மோகன் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஆந்திர காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில், முதலமைச்சர் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது எனவும், ஜனநாயக ரீதியில் நாகரிகமாகவும் ஒருவரை ஒருவர் மதிப்புடனும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதே போல ஜெகன் மோகன் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு, தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.