இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் மற்றும், இருதரப்பிலும் உலக நாடுகள் அணிவகுக்கும் அபாயம் ஆகியவை கச்சா எண்ணெயின் விலையில் எதிரொலிக்கும் என்பதால், விரைவில் பெட்ரோல் -டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர வாய்ப்பாகி உள்ளது.
இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை மீதான அழுத்தங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.
இந்த கச்சா எண்ணெய் விலை அண்மையில் பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலராக இருந்தது. தற்போது அது 90 டாலராக உயர்வு கண்டுள்ள சூழலில், விரைவில் 100 டாலர் என்பதை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் எரிபொருள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத வகையில் எகிறும் எனவும் கணிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கான பதிலடியை இஸ்ரேல் தொடங்கும்போது, இந்த விலை உயர்வு மேலும் எகிறக்கூடும். இஸ்ரேல் தற்போதைக்கு தடுப்பாட்டத்தை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஈரானின் ட்ரோன்களை வான்வெளியில் தடுத்து அழிப்பதை மட்டுமே செய்து வருகிறது.
அடுத்தக்கட்டமாக இஸ்ரேல் தன் பங்குக்கு தாக்குதலைத் தொடங்கும்போது, மூன்றாம் உலகப்போருக்கான முஸ்தீபுகளை அடையாளம் காணலாம். அவை கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வில் அதிகம் எதிரொலிக்கவும் செய்யும்.