ஷா ஆலம்:
ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தின் நலனை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை, மாறாக சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுவதற்கு பல்வேறு திட்டங்கள் தொடக்கி, செயற்படுத்தி வருகிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அல்லது செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் நாட்டின் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தினரின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப, அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங் ஆகிய பகுதிகளில் கடுமையான வறுமை நிலை ஒழிக்கப்பட்டதை அன்வார் சுட்டினார்.
எந்த இனமாக இருந்தாலும் வறுமை ஒழிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அத்தகைய முயற்சிகள் இந்தியச் சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருந்தன என்றும் அவர் கூறினார்.
“எனவேதான், கடுமையான வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளித்தேன். எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், கோலாலம்பூரிலும் நெகிரி செம்பிலானிலும் இத்திட்டத்தின்கீழ் அதிகம் பலனடைந்தவர்கள் இந்தியச் சமூகத்தினரே,” என்று பிரதமர் விவரித்தார்.
ஐந்தாவது அனைத்துலக மாநாடு மற்றும் இந்திய அரசியல் மேதையான டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் மற்றும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் தொடக்க உரையாற்றியபோது அன்வார் இதனைக் கூறினார்.
இதற்கிடையில், நேற்று தொடங்கிய இரண்டு நாள் மாநாட்டில், இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சவுதி அரேபியா, சிங்கப்பூர், புருனே, பிரிட்டன் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து 250 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட சுமார் 1,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.