“சிங்க பெண்..” ஈரான் ஏவுகணைகளை நொடி பொழுதில் சுட்டு வீழ்த்திய ஜோர்டான் இளவரசி சல்மா?

அமன்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலைச் சமாளிக்க இஸ்ரேலுக்கு பல நாடுகள் உதவிய நிலையில், ஜோர்டன் இளவரசியும் இதில் கொடுத்ததாகத் தகவல் பரவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சில நாட்களாகவே இஸ்ரேல் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்துவோம் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்தச் சூழலில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு திடீரென இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை ட்ரோன்களை ஏவித் தாக்கியது. இருப்பினும், அந்தத் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொண்டது.இதற்காக இஸ்ரேலுக்கு பல்வேறு நட்பு நாடுகள் உதவின.

இளவரசி சல்மா: அதன்படி ஜோர்டான் கூட இஸ்ரேலுக்கு மிகப் பெரியளவில் உதவின. இஸ்ரேலை நோக்கி வந்த பல ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஜோர்டான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. அதாவது ஜோர்டான் வான்வெளியில் நுழைந்த ஈரான் ட்ரோன்களை இவர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளார். இதற்கிடையே ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் ஜோர்டான் ராணி ரானியா ஆகியோரின் மூன்றாவது மகள் இளவரசி சல்மா பின்ட் அப்துல்லாவை இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தி இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

அதில் ஈரான் நாட்டின் ட்ரோன்க்ளை சல்மா பின்ட் தானாகவே விமானப் படை விமானத்தில் சென்று சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லி அந்தத் தகவல் இணையத்தில் டிரெண்டானது. அவர் ராயல் ஜோர்டானிய விமானப் படையின் பைலட் என்பதால் இந்த மிஷனில் அவர் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது. விமான பைலட் யூனிபார்மில் அவரது போட்டோவை இணையத்தில் பலரும் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன: ஆனால், உண்மை என்னவென்றால் அவர் ஜோர்டன் விமானப் படை பைலட்டாக இருந்தாலும் அவர் இந்த மிஷனில் பங்கேற்றார் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. ஜோர்டானின் இளவரசி சல்மா 6 ஈரான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லி ஜோர்டானின் விமானப்படை பைலட் சீருடையில் இருக்கும் 23 வயதான சல்மா பின்ட்டின் படம் இணையத்தில் டிரெண்டானது. ஆனால், இப்போது டிரெண்டாகும் இந்த போட்டோ கூட புதிய போட்டோ இல்லை. அது 2023இல் அவரை பற்றி அந்நாட்டுச் செய்தி ஊடகம் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட படத்தைத் தான் இப்போது இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

என்ன படம்: இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டான நிலையில், பலரும் இதைப் பரப்பினர். இதையடுத்து ட்விட்டர் தளம் இது பொய்யான தகவலாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை மெசேஜ்ஜை இது தொடர்பான அனைத்து ட்வீட்களிலும் சேர்க்கப்பட்டது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஜோர்டான் இளவரசி சல்மா கடந்தாண்டு காசாவில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பும் மிஷனில் ஈடுபட்டார். அந்த மிஷனை தலைமை தாங்கியதே அவர் தான். அது தொடர்பான கட்டுரையில் வெளியான படத்தைத் தான் இப்போது ஈரான் ட்ரோன்களை அவர் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லிப் பரப்பி வருகிறார்கள்.

யார் இந்த சல்மா: ராயல் ஜோர்டானிய விமானப்படையில் முதல் லெப்டினன்ட் ஆன இளவரசி சல்மா, வடக்கு காசாவில் உள்ள 41 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு உதவி செய்தார். 23 வயதான அவர் 2020 முதல் ஜோர்டன் விமான படையில் பைலட்டாக இருக்கிறார். ஜோர்டன் நாட்டின் முதல் பெண் விமானி அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here