பினாங்கில் எல்.ஆர்.டி. திட்டம்; நல்ல தொடக்கமாக அமையுமா?

 

* பினாங்கில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல், புதிய பிரச்சினை அல்ல

* நெரிசலைத் தீர்க்க மினி பஸ் சேவையைக் கொண்டு வர பரிந்துரை

* பல மணி நேரம் நெரிசலில் சிக்கிக் கொண்டால், முக்கியப் பணிகள் என்ன ஆகும்?

எம்.எஸ். மலையாண்டி

   பினாங்கு மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட எல்ஆர்டி இலகு ரயில் திட்டத்திற்கு அமைச்சரவை இறுதியாக பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.

 அதுமட்டுமன்றி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த எம்.ஆர்.டி. கார்ப் நிறுவனத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு நியமனம் செய்திருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அண்மையில் அறிவித்திருந்தார்.

    பினாங்கு எல்ஆர்டி திட்டம் அநேகமாக 2030ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக   சிலிக்கோன் தீவு எனப்படும் விமான நிலையம் அருகில் உள்ள பினாங்கின் தென் பகுதியிலிருந்து கொம்தார் ஜார்ஜ் டவுன் வரையில் எல்ஆர்டி திட்டம் தொடங்கப்படும்.

   29 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட பினாங்கு எல்ஆர்டி முத்தியாரா சேவைக்காக மொத்தம் 20 நிலையங்கள் ஏற்படுத்தப்படும். கொம்தாரிலும் பினாங்கு சென்ட்ரல் எனுமிடத்திலும் இண்டர்சேஞ் நிலையங்களும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

என்ன செலவு

     பினாங்கு எல்ஆர்டி இலகு ரயில் சேவைத் திட்டத்திற்கான செலவு 10.5 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் இருக்கும் என்று  எதிர்பார்க்கப் படுகிறது என பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ தெரிவித்திருக்கின்றார்.

   ஏற்கெனவே, 2018ஆம் ஆண்டு வெளியான ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் பார்த்தால் கொம்தாரிலிருந்து பாயான் லெப்பாஸ் வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கான இத்திட்டத்திற்கு சுமார்  9.5 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது இது 10.5 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்திருக்கிறது.

போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?

    பினாங்கில் முதல் எல்ஆர்டி திட்டம் அந்த மாநிலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.

     நிச்சயமாக பினாங்கின் போக்குவரத்து நெரிசலுக்கு இத்திட்டம் 100 விழுக்காடு தீர்வு காண முடியாது என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கமே என்று பினாங்கு முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.

     பினாங்கில் நிறைய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக் கின்றன. அப்படி இருந்தும் அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாகிறதே தவிர குறைந்திருப்பதாகத் தெரியவில்லை.

  குறிப்பாக பெருநாட்களில் போக்குவரத்து நெரிசல் மிகமிகக்  கடுமையாக இருக்கிறது. இது  மக்களிடம்  நீண்டகாலக்  குறைபாடாக அமைந்திருக்கிறது.

 ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் அது மக்களுக்குத்தான் தேவையற்ற சிரமங்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

   சில வேளைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலருடைய முக்கியமான பணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு விடுகிறது.

A Massive traffic jam towards Sungai Besi toll plaza yesterday. — S.S. KANESAN/The Star

அரசு சாரா இயக்கங்களின் எதிர்ப்பு

     பினாங்கு எல்ஆர்டி திட்டத்திற்கு அரசு சாரா அமைப்புகள் சில ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றன. இந்தத்  திட்டத்தினால் பினாங்கில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு பிறந்து விடுமா என்ற கேள்விகள் எழுப்பி அந்த அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றன.

  இந்த கோடிக்கணக்கான ரிங்கிட் செலவில் எல்ஆர்டி திட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பதில் பினாங்கிலுள்ள பொதுப்போக்குவரத்துச் சேவைத் தரத்தை அந்தப் பணத்தைக் கொண்டு உயர்த்தலாமே என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தி வந்திருக்கின்றன.

 பினாங்கில் பொதுப்போக்குவரத்துச் சேவை இன்னும் சிறந்த முறையில்  உயர்த்தப்படுமானால் நெரிசலை நிச்சயம் குறைக்க முடியும் என்பது அந்த அமைப்புகளின் நம்பிக்கையாக அமைந்திருக்கிறது.

நீண்ட காலப் பிரச்சினை

     பினாங்கில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் மோசமடைகிறது என்பது ஒரு புதிய பிரச்சினை அல்ல என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என். சுப்பாராவ்  மக்கள் ஓசையிடம் கருத்துரைத்தார்.

 போக்குவரத்து நெரிசலை தற்போது ஒரு நெருக்கடிதான் என்று மக்கள் கருதுகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது என்றார் அவர். அந்த அடிப்படையில்தான்  பினாங்கு எல்ஆர்டி திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பதில் பொதுப்போக்குவரத்து  சேவைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டு அரசு சாரா அமைப்புகள் போராடி வந்திருக்கின்றன என்று சுப்பாராவ் குறிப்பிட்டார்.

 எல்ஆர்டி திட்டத்திற்குக் கோடிக்கணக்கான ரிங்கிட் செலவாகிறது. இத்திட்டத்திற்காக சில இடங்களைக் கையகப்படுத்தும் நிலையும் உள்ளது. மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று மண்ணின் தோழர் கழகம் முறையிட்டு வந்திருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

நெரிசலுக்குக் காரணம் என்ன?

     பினாங்கில் பொதுப் போக்குவரத்துச் சேவை மக்கள் தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

     பினாங்கின் மக்கள் தொகை வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்களால் ஏற்படும் வளர்ச்சி போன்றவற்றுக்கு ஏற்ப பொதுப்போக்குவரத்து சேவை மேம்பாடு  காணவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத்தக்க அம்சமாகும்.

     தற்போது  மிக நீளமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதால்  சாலைகளில்  ஏற்படக்கூடிய நெரிசலுக்கு அதுவும் காரணமாக அமைகிறது என்பதை மறுக்க முடியாது.

     தற்போது பினாங்கில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண பொதுப்போக்குவரத்துச் சேவையை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

     உதாரணத்திற்கு முன்பு இருந்தது போல மினி பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் மாநில அரசு பரிசீலிக்கலாம். குட்டி பஸ்கள் எனப்படும் மினி பஸ்கள் பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டால் நெரிசலை ஓரளவு குறைக்க முடியும் என்பது என்னைப் போன்றவர்களின் நம்பிக்கையாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

     பினாங்கு எல்ஆர்டி சேவை போக்குவரத்து நெரிசலைத் தீர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here