புதிய ஒளியேற்றும் புதிய திட்டம்

பி.ஆர். ராஜன்

பட்டப் படிப்பை முடித்திருந்தாலும்  வேலை வாய்ப்புகள் இன்றி அல்லாடிக் கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கும்  மாணவர்களுக்கும்  தொழில்பயிற்சியை வழங்குவதற்கு  ‘திவெட்’ எனப்படும்  தொழில் நுட்பம், தொழில்பயிற்சி கல்வி, பயிற்சி திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியிருக்கிறது.

இத்திட்டத்தின்வழி வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள்,  படிப்பை கைவிட்ட இடைநிலைப்பள்ளி மாணவர்கள், ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள், தனிநபர்கள் போன்றவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதில் அரசாங்கம் அதீத கவனம் செலுத்தி வருகிறது.

திவெட் பயிற்சி பெறும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதிலும்  அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, வேலை வாய்ப்புகள் இன்றி இருப்பவர்கள் இப்பயிற்சிக்குப் பின்னரும்  தொடர்ந்து வேலை இல்லாமல் இருப்பது  பயிற்சியின் நோக்கத்தை ஒரு கேள்விக்குறியாக்கிவிடும்.

வேலையில் உள்ளவர்களுக்கு திறன் உயர்வு பயிற்சிகள் அளிப்பது, பட்டதாரிகளை புதிய தொழில்துறைகளில் ஈடுபட வைப்பது, மாணவர்களுக்கு கைத்தொழில் துறைகளில்  பயிற்சி அளிப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வரும் முயற்சிகளாகும்.

திவெட் பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு ஜிஐடிசி எனப்படும் அரசாங்கம்– தொழில்துறை திவெட் ஒருங்கிணைப்பு மன்றம் என்ற ஒரு புதிய அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

திவெட் பயிற்சி மாணவர்களுக்கு  இன்டர்ன்ஷிப் தொழில்பயிற்சி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் மையமாக இது விளங்கும். வரும் செப்டம்பர் மாதம் இந்த மையம் செயல்படத் தொடங்கும் என்று அதன் தலைவர் சோ தியான் லாய் அறிவித்திருப்பது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய ஒளியை ஏற்றி வைப்பதாக உள்ளது.

பயிற்சியோடு வேலை வாய்ப்பையும் உறுதி செய்திடுவதற்கு  இந்த அமைப்பு கிட்டத்தட்ட 10 ஆயிரம் நிறுவனங்களை அடையாளம் கண்டிருக்கிறது. இந்த 10 ஆயிரம் நிறுவனங்களோடு  ஒருங்கிணைக்கப்படும் ஒரு செயல்திட்டத்தின்வழி வேலை வாய்ப்புகள் உடனடியாக  உறுதிசெய்யப்படும்.

கடந்த காலங்களில் அரசாங்கம், தனியார் திவெட் கல்விக் கழகங்கள் பயிற்சியோடு அவற்றின் கடமைகளை முடித்துக்கொள்ளும். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில் மேலதிக உதவிகளை செய்வதும் இல்லை.

ஆனால்,  இந்த ஜிஐடிசி வேலை வாய்ப்பு மையமானது பயிற்சியோடு வேலை வாய்ப்புகளையும் உறுதி செய்யும்.  திவெட் பயிற்சிகளை கண்காணிக்கும் ஒவ்வோர் அமைச்சும் பயிற்சி பெறும் பட்டதாரிகளின் விவரங்களை அவர்களிடம் தந்துவிடும். அவர்கள் இன்டர்ன்ஷிப் வேலை பயிற்சியையும் வேலையையும் பெற்றுத் தருவதில் கவனம் செலுத்துவர்.

இதன்வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வேலையும் வருமான உத்தரவாதமும் உறுதி செய்யப்படுகிறது. பயிற்சிக்குப் பின்னர் வேலை வாய்ப்பு தேடி அலைய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இனி இருக்காது.

ஜிஐடிசி மையமானது 58 தொழில் அமைப்புகளுடன்  பங்காளித்துவ ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருக்கிறது. மேலும் 48 தொழில் அமைப்புகளுடன் கையொப்பமிடுவதற்கு அது தயாராக இருக்கிறது.

திவெட் திட்டம் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதற்காக  அனைத்து 12 அமைச்சுகள், அவற்றின் ஏஜென்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும்  ஒரே அமைப்பாக ஜிஐடிசி விளங்கும்.

இந்த அமைப்பானது திவெட் பாடத் திட்டங்களிலுள்ள பிரச்சினைகளைச் சரி செய்வதற்கு  390 வல்லுநர்களையும் நிபுணர்களையும் கொண்டிருக்கிறது. இதன்வழி தொழில்துறைக்குத் தேவையான, பொறுத்தமான பயிற்சிகள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.

நடப்பு சூழ்நிலையில்  பயிற்சி பெறுவது ஒரு துறையாக இருக்கிறது. செய்யும் வேலை வேறு துறையாக இருக்கிறது. இதனால் ஒன்றொடொன்று தொடர்பில்லாமல்  ஒரு தொழிலாளியின்  தொடர் வளர்ச்சிக்குப் பயனில்லாது போய்விடுகிறது.

அதேபோல் பலவீனமான பாடத் திட்டமும்  தங்கள் பயிற்சி பெறும் கல்விக் கழகங்களில் உள்ள  காலம் கடந்த வசதிகளும்  தொழில்துறை தரத்தை எட்டுவதாக இல்லை.

இந்த பலவீனங்களையெல்லாம் களையும் வகையில் ஜிஐடிசி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மன்றத்தில் இடம் பெற்றுள்ள நிபுணர்கள் 19 பொருளாதாரத் துறைகளிலிருந்து தேர்வு பெற்றிருக்கின்றனர்.

துறைசார்ந்த அமைச்சுகள் அவற்றின் ஏஜென்சிகள் ஆகிய தரப்புகளுக்கு  பயிற்சி கட்டமைப்புகள், வழங்கப்படும் பயிற்சிகள் தொழில் துறைக்குப் பொறுத்தமானவை என்பதை உறுதி செய்யும் ஆலோசனைகளை வழங்குவர்.

இந்த மையத்தில் தனியார் துறைகள் அவர்களின் மாணவர்களுக்கு போதிக்கும் வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் சலுகைகளையும் நிதி உதவிகளையும் வழங்கினால் இன்னும் நிறைய பேர் திவெட் பயிற்சிகளுடன் வேலை வாய்ப்புகளையும் பெறுவர்.

இது வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதோடு பலரின் குறிப்பாக, இளைய தலைமுறையினரின் வாழ்க்கையில்  புதிய ஒளியை ஏற்றிவைக்கும் என்று தாராளமாக நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here