எம்.எஸ்.மணியம்
சிப்பாங்:
குறைந்த விமானக் கட்டண சேவையை வழங்குவதில் முன்னணி விமான நிறுவனமாக விளங்கி வரும் ஏர் ஆசியா மலேசியாவிலிருந்து இந்தியா ஜெய்ப்பூர் நகருக்கு விமான சேவையை வழங்கும் முதல் விமான நிறுவனமாக திகழ்வதாக அதன் விமான போக்குவரத்து குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போ லிங்கம் தெரிவித்தார்.
16 ஆம் நூற்றாண்டின் கோட்டை மற்றும் அற்புதமான ஜல் மஹால் அரண்மனையின் அழகுக்காக உலகம் முழுவதும் பிரபலமான இளஞ் சிவப்பு நகரம் என அழைக்கப்படும் ஜெய்ப்பூருக்கு ஏர் ஆசியா முதல் சேவையை வழங்குவதால் இது ஏர் ஆசியாவுக்கு மட்டுமல்லாமல் மலேசியாவிற்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். இது கோலாலம்பூரை வட இந்தியாவில் உள்ள இளஞ் சிவப்பு நகரை இணைக்கிறது. இதனையொட்டி இந்தியாவுக்கான அனைத்து விமான இருக்கைகளுக்கும் ஏர் ஆசியா 20 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு சுவாரசியமான இடங்களை கொண்டதாகும். மற்றும் கோலாலம்பூர் அதன் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் அனைத்து வகையான பயணிகளுக்கும் ஏற்ற தனித்துவமான உள்ளூர் கலாச்சாரம் ஆகியவற்றுடன் தனித்தன்மை கொண்டதால் இவ்விரு நகரங்களுக்கான சேவை பொருள் பொதிந்த ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவின் அற்புதமான நகரங்கங்களான திருவனந்தபுரம், சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம் ஆகியவற்றுக்கு மொத்தம் 78 வாராந்திர விமானங்கள் சேவையில் ஈடுபடுவதோடு கோலாலம்பூரிலிருந்து அகமதாபாத், புது டில்லி மற்றும் அமிர்தசரஸுக்கு இரண்டு நேரடி வழித் தடங்களையும் எட்டு வாராந்திர விமானச் சேவைகளையும் ஏர் ஆசியா வழங்குகிறது என்று போ லிங்கம் தெரிவித்தார்.