பராமரிப்பு இல்லத்தில் முதியவர் தாக்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது

கூலிமில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் முதியவர் ஒருவருக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பில்  விசாரணைக்கு உதவுவதற்காக  44 வயதான இல்ல நடத்துனர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். தாமான் டேசா அமானில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 3.50 மணியளவில் போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக கூலிம் காவல்துறைத் தலைவர் முகமட் அஜிசுல் முகமட் கைரி இன்று தெரிவித்தார்.

தாமான் டேசா அமானில் உள்ள வீட்டில் முதியவர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவத்தின் நான்கு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. விசாரணையைத் தொடர்ந்து, முதியோர் பராமரிப்பு இல்லம் நடத்துபவர் மற்றும் 36 வயது பெண் ஊழியர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

70 வயது முதியவர் தனது நினைவாற்றல் தொடர்பான நிலை காரணமாக வீட்டில் அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக அஜிசுல் கூறினார். முதியவர் மீது தாக்குதல் நடத்த போது வேறு யாராவது இருந்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

முன்னதாக, ஐக்கிய மலேசியன் உரிமைகள் கட்சியின் (உரிமை) தலைவர் டேவிட் மார்ஷல், பாடாங் செராய்யில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தை, ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாக  கூறப்பட்டதை அடுத்து, காவல்துறையும் சமூக நல இலாகாவும்  விசாரணை நடத்த வேண்டும் என்றார். அந்த வீடியோவில், வீட்டில் பணிபுரிபவர் என நம்பப்படும் பெண் ஒருவர், முதியவரை திட்டுவதைக் காணலாம். திடீரென்று, அப்பெண் அந்த முதியவரை தாக்கி கீழே தள்ளுவதை காண முடிகிறது.  பின்னர், பலமாக பிரம்பால் அடிக்கும் சத்தமும் அந்த முதியவர் வலியால் அலறுவது கேட்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here