மம்முட்டிக்கு நிகராக எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது: வித்யா பாலன் புகழாரம்

மம்முட்டி நடித்திருந்த கதாபாத்திரத்தைப்போல் எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது என வித்யா பாலன் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் மம்முட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை முக்கியக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்’ என்கிற படத்தை இயக்குநர் ஜியோ பேபி இயக்கியிருந்தார்.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்முட்டி, முதன்முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள பாலிவுட் நடிகை வித்யா பாலன் மம்முட்டி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

“காதல் தி கோர்’ படத்தில் மம்முட்டி நடித்த கதாபாத்திரத்தைப்போல் இங்குள்ள எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது. கேரளத்தில் இலக்கியம் படிக்கும் மக்கள் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

“மம்முட்டியின் பாத்திரத்தை அவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். இது கேரளத்தில் சற்று எளிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைத்துவிதமான படங்களையும் திறந்தமனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்,” என்றார்.

“தென்னிந்திய நடிகர்களைவிட அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். மம்முட்டி இந்தப் பாத் திரத்தில் நடித்தால் தனது வழக்கமான ஆணாதிக்க பிம்பத்தைப் பாதிக்கும் என நினைக்காமல், துணிச்சலுடன் நடித்துள்ளார்.

“மலையாள சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இதில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். இதைவிடவும் மிகப்பெரிய ஆதரவு தன்பாலினத்தவர்களுக்கு இருக்குமா எனத் தெரியவில்லை.

“துரதிஷ்டவசமாக எந்த இந்தி நடிகரும் ‘காதல் தி கோர்’ படத்தினைப் போல் பாலிவுட்டில் படம் எடுக்கமாட்டார்கள்,” என துல்கர் சல்மானுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகை வித்யா பாலன் மம்முட்டியைப் புகழ்ந்து பேசி உள்ளார்.

இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here