‘இசை – மொழி’ எது பெரிது? – இளையராஜாவை சீண்டிய வைரமுத்து- கொதித்தெழுந்த கங்கை அமரன்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், அதுகுறித்து விவரித்த வைரமுத்து, இதில் என்ன சந்தேகம் இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் பாட்டு என்று பொருள் என எடுத்துரைத்தார்.

சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும் சில நேரங்களில், இசை சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்களும் உண்டு என்று கூறிய வைரமுத்து, இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்றார். மேலும், பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசைதான். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்: எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள். அப்படி இருந்த நட்பையே கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது.

நான் அவருக்குசவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here