கராச்சி: “இந்தியா எங்களின் பரம எதிரி” என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையத் அசிம் முனீர் அந்நாட்டில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ரிசல்பூரில் உள்ள அஸ்கர் கான் அகாடமியில் பாகிஸ்தான் விமானப்படையின் பாஸிங் அவுட் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது இந்தியாவை தாக்கிப் பேசியுள்ளார் சையத் அசீம் முனீர்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான சூழல் குறித்துப் பேசியுள்ளார் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். அவர் பேசுகையில், தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இந்தியா தான் நம்முடைய பரம எதிரி” என்று பேசியுள்ளார் அசீம் முனீர். தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார். தற்போது நம் நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் இந்தியா தங்களின் பரம எதிரி என கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டு இராணுவ தளபதியின் இந்தப் பேச்சு இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என விமர்சிக்கப்படுகிறது. தேவையில்லாமல் பாகிஸ்தான், நம் நாட்டைச் சீண்டுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.