நமது செய்தியாளர்: ராமேஸ்வரி ராஜா
படங்கள்: தி. மோகன்
மலேசிய இந்திய உணவகம் நடத்துவோர் கூட்டுறவுக் கழகத்திற்கு (கோப்ரிமாஸ்) தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வௌ்ளிக்கிழமை ஒரு லட்சம் ரிங்கிட் சிறப்பு மானியத்தை அறிவித்தார்.
மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் (எஸ்கேஎம்)கீழ் கூட்டுறவுக் கழகங்களை வலுப்படுத்தும் திட்டங்களுக்காக இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்நிதியைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்தி அதன் மூலம் கோப்ரிமாஸ் உறுப்பினர்களுக்கு அனுகூலங்களைக் கொண்டு வருவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். கோப்ரிமாஸ் தலைவரராக ஜெ.சுரேஷ் இருக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள உணவகங்களுக்கு சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் இருந்து அனுப்பி வைப்பதற்குரிய ஒரு கிடங்கை உருவாக்குவதற்கும் கோப்ரிமாஸ் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று ரோயல் சிலாங்கூர் கிளப்பிலுள்ள டேவான் டான்ஸ்ரீ ஹம்ஸாவில் கோப்ரிமாஸின் 11ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தபோது டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.
கூட்டுறவுக் கழகங்களுக்கு வழங்கப்படும் மானிய உதவித் தொகையானது தேசியப் பொருளாதாரத்தில் அவர்கள் தனித்து நின்று செயல்படுவதற்குரிய ஒரு சக்தியைக் கொடுக்கும். பெரு நிறுவனங்கள் மேலும் முதலீட்டாளர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் இந்திய சமுதாயத்தினர் அமைத்திருக்கும் கூட்டுறவுகளின் மொத்த எண்ணிக்கை 352. இவற்றில் கிட்டத்தட்ட 255,000 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.
இந்த 352 இந்தியர்களின் கூட்டுறவுக் கழகங்கள் அனைத்தும் மொத்தம் 1.75 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளைக் கொண்டிருக்கின்றன. பங்கு, சந்தா வழி இவற்றின் மொத்த வருமானம் 618.74 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள இந்தியக் கூட்டுறவுக் கழகங்கள் இந்நிதியிலிருந்து கடன் பெற்று முதலீடு செய்து வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தி வலுப்படுத்தலாம். பெறப்படும் கடனுக்கு 4 விழுக்காடு வட்டி மட்டுமே விதிக்கப்படுகிறது.
நாட்டில் 352 இந்தியக் கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. ஆனால், அவற்றுள் 25 கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே இந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளன.
நமக்குத் தேவையென்றால் நாம்தான் உதவிகளைத் தேடிச் செல்லவேண்டும். வாய்ப்புகள் நம் வீடு தேடி வரும் என்றால் எதுவும் கிடைக்காது. பொருளாதார முன்னேற்றமும் இருக்காது என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ ரமணனின் அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினரும் எஸ்கேஎம் இயக்குநர் வாரிய உறுப்பினருமான ஆ. குமரேசன், எஸ்கேஎம் துணைத் தலைமை அதிகாரி அம்ரான் பின் ஹாஜி அப்துல் காடீர், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், எஸ்கேஎம் அதிகாரிகள், கோப்ரிமாஸ் உச்சமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.