ஈப்போ:
அனைவருக்கும் நீதி என்ற கொள்கையினால், ‘கேகே சூப்பர் மார்ட்’ போன்ற உள்ளூர் நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதை இஸ்லாமிய சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று பேராக் முஃப்தி வான் ஸாஹிடி வான் தே தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நிலையிலிருந்து, ‘கேகே சூப்பர் மார்ட்’ நிறுவனத்திற்கு எதிராகச் சுமத்தப்பட்டப் பழிகள் நிரூபிக்கப்படவில்லை என்பதை குர்ஆன் கொள்கைகள் காட்டுவதாக ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், டத்தோஸ்ரீ வான் ஸாஹிடி விளக்கினார்.
“‘கேகே சூப்பர் மார்ட்’ வழங்கிய விளக்கத்திலிருந்தும், பொது மன்னிப்பிலிருந்தும், இந்தச் சம்பவத்தில் உள்நோக்கமோ கெட்ட எண்ணமோ நிரூபணமாகவில்லை என்பது தெளிவாக உள்ளது,” என்று அவர் சொன்னார்.
முன்னதாக, சிலாங்கூரின் பண்டார் சன்வேயில் உள்ள அதன் கடை ஒன்றில், ‘அல்லாஹ்’ எனும் சொல் கொண்ட காலுறைகள் விற்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தைப் புறக்கணிக்கும்படி கடந்த மார்ச் மாதம் பொது அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து அவர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.