அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமின் வழங்கக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முன் வைத்த வாதம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. விசாரணை தொடர்ந்தபோது இந்த திட்டத்தில் கெஜ்ரிவாலின் பங்கு உறுதி செய்யப்பட்டது என்று அதில் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இதனை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, ரூ.100 கோடி ஊழல் என்று கூறினீர்கள், பிறகு 2 ஆண்டுகளில் ரூ.1100 கோடியானது எப்படி?ரூ.100 கோடி லஞ்சம் கைமாறியது என்பது அமலாக்கத்துறை அதிகாரிகளின் மூளையில் உதித்ததா?என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், ரூ.1100 கோடியில் மொத்த விற்பனையாளர் லாபம் ரூ.590 கோடி என விளக்கம் அளித்தார்.

மேலும், போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஒருவரை கைது செய்ய முடியும். அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குமூலங்களில் கெஜ்ரிவால் பெயர் குறிப்பிடப்பட்ட விவரங்களை தாக்க செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடுகிறோம். இவ்வழக்கின் கோப்புகளில் அதிகாரிகள் என்ன எழுதியுள்ளனர் என்பதை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.வழக்கின் கோப்புகளில் முதல் 2 பாகங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (09.05.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட கெஜ்ரிவாலுக்கு அடிப்படை உரிமை இல்லை எனவும், தேர்தல் பரப்புரைக்காக இதுவரை எந்தத் தலைவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது இல்லை எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்கப்பட வேண்டுமென்றால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க முடியாது எனவும், ஏனெனில் தேர்தல் ஆண்டு முழுவதும் நடைபெறுவதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. எனவே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here