கோலாலம்பூர்: செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்கிற்கு நேற்று அனுப்பப்பட்ட கொலை மிரட்டல் மற்றும் இரண்டு தோட்டாக்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி, இந்த சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதிக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடாது என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அச்சுறுத்தல் கூடாது என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் வருவதையிட்டு நான் வருந்துகிறேன். அவர்களுக்குப் பேசுவதற்கு உரிமை உண்டு. இது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். இது போன்ற செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.இது வெட்கக்கேடானது என இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கோக் போலீஸ் அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் அதிகாரிகளிடம் விசாரணைக்கு விடப்படும் என்றும் ஃபஹ்மி கூறினார். இன்று ஒரு முகநூல் பதிவில், கோக் தனது அஞ்சல் பெட்டியில் தோட்டாக்கள் அடங்கிய கடிதம் ஒன்றை நேற்றிரவு கண்டுபிடித்ததாகவும் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் கூறினார்.