அதிக வரி விதிப்பு- அதனால் தான் இந்தியாவுடனான உறவை துண்டித்து கொண்டோம்

இஸ்லாமாபாத் : புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, 2019 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் சந்திக்கும் வர்த்தக சவால்கள் குறித்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷர்மிளா பாரூக்கின் கேள்விக்கு, அந்நாட்டு துணை பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சருமான இஷாக் தார் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானின் இறக்குமதிக்கு, 200 சதவீத வரி விதிக்க இந்தியா முடிவு செய்தது. அதுமட்டுமின்றி காஷ்மீரின் பஸ் வசதியையும், வர்த்தக சேவையையும் தடை செய்தது.

ஜம்மு – காஷ்மீர் பிரச்னை உட்பட, இந்தியாவுடனான பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கவும், பேச்சு வாயிலாக சரி செய்யவும் நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறோம். அமைதி பேச்சுக்கு உகந்த சூழலை உருவாக்கும் பொறுப்பு தற்போது டில்லி வசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த மார்ச்சில் லண்டனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவுடனான வர்த்தக உறவைத் தொடர பாகிஸ்தானின் தொழில்துறை விரும்புவதாக இஷாக் தார் தெரிவித்து இருந்தார்.

ஆனால், அடுத்த சில நாட்களில், 2019இல் துண்டிக்கப்பட்ட வர்த்தக உறவை மீண்டும் தொடர விருப்பமில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆகஸ்டில் மத்திய அரசு நீக்கியது. அப்போது, இந்தியாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்தது. இது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் சிக்கலை ஏற்படுத்தியது.

மற்ற அண்டை நாடுகளைப் போல் பாகிஸ்தானுடனும் இயல்பான உறவைப் பேண இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதம் மற்றும் வெறுப்பு இல்லாத அத்தகைய சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here