மனித கடத்தலில் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் மலேசியர் தற்போது நேபாள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு தலையிட வேண்டுமென செனட்டர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். நேபாள அதிகாரிகளுடன் விஸ்மா புத்ரா பேச்சு நடத்த வேண்டும் என்றும் மாலா வேலுவை உடனடியாக விடுவிக்கவும், மலேசியாவிற்கு பாதுகாப்பாக திரும்ப அழைத்து வர வெளியுறவுத் துறை அமைச்சர் முகமட் ஹசானுக்கு கடிதம் எழுதியதாக சி சிவராஜ் கூறினார்.
மாலாவின் வழக்கு, மனித கடத்தலை நிவர்த்தி செய்யும் சட்ட கட்டமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக நேபாளத்திற்கு கடத்தப்படும் வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அவர் கூறினார். நேபாள மனித கடத்தல் மற்றும் போக்குவரத்து (கட்டுப்பாட்டு) சட்டம் தற்போது நேபாள குடிமக்களுக்கு அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வரம்பிடுகிறது. இதனால் மாலா போன்றவர்களுக்கு முக்கியமான சட்ட அங்கீகாரமும் ஆதரவும் இல்லாமல் போய்விடுகிறது.
அவரது வழக்கு புதுப்பிக்கப்பட்ட, உள்ளடக்கிய ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் இத்தகைய கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாக்க சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்பு மாலா நேபாளத்திற்குச் சென்றதாகவும், அங்கு அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதோடு பட்டினியால் வாடி துன்புறுத்தலுக்கு ஆளாகி 10 ஆண்டுகளாக வீட்டு அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவளை சிறைபிடித்தவர்களிடமிருந்து தப்பித்த பிறகு, நேபாள அதிகாரிகள் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர்.
Project Liber8 போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளை சிவராஜ் பாராட்டினார். “மாலாவுக்கான இடைவிடாத வக்காலத்தும் ஆதரவும் பாராட்டுக்குரியவை”. மாலாவை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து வழிகளையும் அவர்கள் ஒன்றாக ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். மாலா வேலு மலேசியாவுக்குத் திரும்பி, தீபாவளிக்கு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முடியும் என்பது எங்கள் கூட்டு நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.