புதுடெல்லி: கேதார்நாத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் விமானியும் ஏழு பக்தர்களும் இருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து உத்தராகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இமயமலை கோயிலில் உள்ள ஹெலிபேடில் இருந்து சில மீட்டர் தொலைவில் பறந்த ஹெலிகாப்டர், வானத்தில் சுழன்றபடி தத்தளித்துக் கொண்டிருந்தது.
இது குறித்து விளக்கமளித்த ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட் சௌரப் கஹர்வார், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிபேடில் இருந்து சில மீட்டர் தொலைவில் விமானி, ஹெலிகாப்டரை அவசரமாகத் தரையிறக்கினார் என்றார்.
விமானி பொறுமையுடன் விரைந்து முடிவு எடுத்ததால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்றார் அவர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.