ஜோகூர் பாரு:
மே 17ஆம் தேதியன்று ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த காவல்துறை அதிகாரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 38 வயது காவலர் முகமட் ஹசிஃப் ரோஸ்லான், மே 25ல் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக ஸ்ரீ அலாம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுஹாய்மி இஷாக் கூறினார்.
“முகமட் ஹசிஃப் தோள்பட்டையிலும் இடுப்பிலும் சுடப்பட்டார். அவருக்கு இரண்டு மாத மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்று சுஹாய்மி மே 27ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முகமட் ஹசிஃபுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் அவர் குணமடைந்ததும் ஸ்ரீ அலாம் காவல்துறைத் தலைமையகத்தில் பணிக்குத் திரும்புவார் என்றும் அவர் சொன்னார்.
சம்பவம் காரணமாக முகமட் ஹசிஃபுக்கு ஏற்பட்ட மனவுளைச்சலைக் குறைத்து அவருக்கு நிவாரணம் அளிக்க, மருத்துவமனையில் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேவைப்பட்டால் அவருக்குக் கூடுதல் மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சுஹாய்மி கூறினார்.
உலு திராம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் இருவர் மாண்டனர்.
இந்நிலையில், அங்கு தாக்குதல் நடத்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தாக்குதல்காரரின் குடும்ப உறுப்பினர்கள் ஐவர் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.