மணிப்பூர் வன்முறைக்கு முதலில் தீர்வு காணுங்க.. மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை

நாக்பூர்: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமயைில் 3ஆவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனை தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. 3ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் தான் நம் நாட்டில் முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனை பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார்.

பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது. இந்நிலையில் தான் நாக்பூரில் நடந்த அமைப்பு ரீதியிலான ‘Karyakarta Vikas Varg- Dwitiya’ நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்று பேசினார். அப்போது அவர், மணிப்பூர் மாநிலம் கடந்த கடந்த ஓராண்டாக அமைதிக்கு ஏங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூரில் அமைதி நிலவி வந்தது. ஆனால் துப்பாக்கி கலாசாரம் என்பது அதிகரித்து அமைதியை சீர்குலைத்துள்ளது.

அதோடு வன்முறை நடந்துள்ளது. இதனால் மணிப்பூரில் அமைதியை கொண்டு வர முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் தேர்தல் தொடர்பான பேச்சுகளை விட்டுவிட்டு நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். இதன்மூலம் மத்திய அரசு மணிப்பூரை ஆட்சி செய்யும் பாஜக அரசும் சேர்ந்து வன்முறைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி உள்ளார்.மணிப்பூரில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பீரன் சிங் முதல்வராக உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூரில் கடந்த ஆண்டு வன்முறை தொடங்கியது. அங்குள்ள குக்கி – மைத்தேயி மக்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை வன்முறையாக மாறி மாநிலத்தையே போர்க்களமாக்கியது.

பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் உறைய வைத்தது.  தற்போது மணிப்பூரில் வன்முறை குறைந்து இருந்தாலும் கூட இன்னும் பிரச்சனை முற்றிலுமாக முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது ஒரு சில இடங்களில் மோதல்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அம்மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதாவது அங்குள்ள 2 லோக்சபா தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இத்தகைய சூழலில் தான் மணிப்பூர் பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here