லக்னோ: டெல்லி – லக்னோ (உ.பி.) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியில், நிறுத்தப்பட்ட புல்டோசர் ஓட்டுநரிடம் கட்டணம் செலுத்துமாறு, சுங்கச்சாவடி நிலைய ஊழியர்கள் கேட்டனர். அதனால், ஆத்திரமடைந்த அந்த ஓட்டுநர், புல்டோசர் வாகனத்தைக் கொண்டு அங்கிருந்த இரண்டு சுங்கச் சாவடிக் கட்டணம் வசூலிக்கும் நிலைகளை இடித்துத் தள்ளி சேதம் ஏற்படுத்திவிட்டுச் சென்றார். நல்லவேளையாக கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் அங்கிருந்து ஓடி உயிர்பிழைத்தனர்.
புல்டோசரால் சுங்கச்சாவடி நிலைகள் இடிக்கப்பட்ட சம்பவத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் காணொளியாகப் பிடித்துள்ளனர். அந்தக் காணொளியில், கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் அந்த ஓட்டுரிடம் கேட்டதும் கொஞ்சமும் தாமதியாமல் புல்டோசரால் சுங்கச் சாவடி நிலைகள் மீது மோதி இடித்துத் தள்ளிய காட்சி பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், ஹப்பூரில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வாகனமோட்டி ஒருவர், அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியரை மோதித் தள்ளி விட்டுச் சென்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.