பன்முகக் கலைஞர் விஜயசிங்கம் மறைவு கலை உலகின் முத்து உதிர்ந்தது

பிரபல நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே. விஜயசிங்கத்தின் திடீர் மறைவு மலேசியக் கலை உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருக்கு வயது 78. அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று மலேசியக் கலை உலகத்தினர் தங்களின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் தலைவராக இருந்து அந்த மன்றத்தை மிகச்சிறந்த முறையில் நடத்தி வந்திருக்கும் விஜயசிங்கம் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களைத் தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகப்படுத்தியவர்.
மறைந்த மெ. அறிவானந்தன், வானம்பாடி பாலு, மெல்லிசை மன்னர் ரெ. சண்முகம், பி.கே. சாமி போன்றவர்களைத் திரைக்கதை வசனகர்த்தாவாக்கிய பெருமை விஜயசிங்கத்திற்கு உண்டு.

நடனக் கலைஞராக அறிமுகமாகிய நடராஜனை நடிகனாக அறிமுகப்படுத்தியவர் இவர். டீக்கடை நடத்தி வந்த முகமது கானை, மனோஜ்கான் என்ற தனது தொடர்களில் நடிக்க வைத்தவர் இவர்.  நடிகர்கள் கே. குணசேகரன், வெ. தங்கமணி, திவாகர் சுப்பையா வைரக்கண்ணு போன்றோரை துணை இயக்குநர்களாகவும் பிரதான நடிகர்களாகவும் அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். இவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்.

மேடை நாடகங்கள்
கலை உலகில் அடியெடுத்து வைத்த ஆரம்பக் காலகட்டத்தில் விஜயசிங்கம் இணைந்த கரங்கள் (1973), ராதைக்கேற்ற கண்ணன் (1975) போன்ற மேடை நாடகங்களை அரங்கேற்றினார்.  2018இல் சாணக்கிய சபதம் நாடகத்தை இவர் மேடையேற்றினார். காதல் அது ரகசியம் என்ற திரைப்படத்தையும் இவர் தயாரித்து இயக்கியிருந்தார். 2018இல் வந்தவள் யார் அவள் என்ற மேடை நாடகத்தை அரங்கேற்றினார்.

தன் சகோதரர் கருணாநிதியுடன் சேர்ந்து டிவிபி கினி கிராஃபிக் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களை இவர் 20 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வந்திருக்கிறார். நாடாசுவாரா, நாடாரியா போன்ற தொலைக்காட்சிப் படைப்புகளைத் தயாரித்து இயக்கியவரும் இவர்தான்.

டெலி மூவி, தொலைக்காட்சித் தொடர்கள், தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளின் படைப்புகளுக்கு சொந்தக்காரர் இவர். நடிகர், திரைக்கதை வசனகர்த்தா, எழுத்தாளர், தயாரிப்பாளர், தயாரிப்பு நிறுவன உரிமையாளர் எனப் பன்முகம் கொண்டு தனி முத்திரைப் பதித்தவர் விஜயசிங்கம். கலைஞர் சிவாஜிராஜாவுக்குப் பிறகு மலேசிய சிவாஜி கலை மன்றத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளை இவர் நடத்தி இருக்கிறார்.

1963இல் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்திருக்கும் இவர் இன்ஸ்பெக்டர் சேகர் என்ற தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.  1941 எனும் நாடகம் அரங்கேற்றம் கண்டபோது அதில் விஜயசிங்கம் ஆடியபாதம் எனும் நகைச்சுவைப் பாத்திரத்தில் கலக்கி இருந்தார். அவருடைய கலைப்படைப்புகள் என்றென்றும் மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here