காஷ்மீரில் 3 நாட்களில் 4ஆவது தாக்குதல்.. அதிதீவிர தேடுதல் நடவடிக்கை

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள் கடந்த 3 நாட்களில் 4 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நேற்று மாலை தாக்குதல் நடத்தியதால் விடிய விடிய தீவிரவாதிகளை தேடி அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலி 10 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக தீவிரவாதிகளுடனான மோதலில் துணை ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். தோடா மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் முகாம் மீது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் 6 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தோடா மாவட்டத்தில் நேற்றும் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் விடிய விடிய பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுடனான மோதல் தொட்ர்ந்து நீடித்தும் வருகிறது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிற 4 பயங்கரவாதிகளின் உருவப் படங்களை ஜம்மு காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்த 4 பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.தற்போதும் ஜம்மு காஷ்மீரின் பலேசா பகுதியில் கோடா அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here