ராகுல்: பிரதமர் மோடி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்

கல்பெட்டா: மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடி, தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனது வயநாடு தொகுதிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, அங்கு தொண்டர்களையும் வாக்காளர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் அவர், ஆற்றிய உரையின்போது இதனைத் தெரிவித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன்படி ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே வகிக்க முடியும். ஆகையால், அவர் எந்தத் தொகுதியில் இருந்து விலகிக்கொள்வார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து மக்களுடன் கலந்து ஆலோசித்த பின் இறுதி முடிவை அறிவிப்பேன். இந்திய ஏழைகள் மற்றும் வயநாடு மக்கள் எனக்குக் கடவுள் போன்றவர்கள். எனவே, அவர்களின் விருப்பப்படியே செயல்படுவேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வயநாடு தொகுதிக்குட்பட்ட எர்னாடு சட்ட மன்றத் தொகுதியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “மத்தியில் ஆட்சி அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி இயல்பான கூட்டணி அல்ல. அதனால் ஒருபோதும் தன்னிச்சையாக செயல்பட முடியாது.

அயோத்தி மக்கள் கூட நாங்கள் வெறுப்புக்கு எதிரானவர்கள் என்ற செய்தியை பாஜகவுக்கு தெளிவுபடுத்தி உள்ளனர். இந்திய மக்கள் அவருக்கு ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இனியாவது, பிரதமர் மோடி தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here