சிக்கிம் நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் 1200 சுற்றுலாப் பயணிகள்; விமானம் மூலம் மீட்க ஏற்பாடு

சிக்கிம் மாநிலத்தை உருக்குலைத்த நிலச்சரிவுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் 1200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இடைவிடாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் காரணமாக சிக்கிமில் உள்ள மங்கன் மாவட்டத்தில் 15 வெளிநாட்டவர்கள் உட்பட 1200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். சிக்கிம் மாநில மக்கள் இயற்கைப் பேரிடர்களுக்கு பழகியவர்கள் என்பதாலும், உள்ளூரில் வசிப்பிடங்கள் மற்றும் உதவிகளை பெறக்கூடியவர்கள் என்பதாலும், நிலச்சரிவு பாதிப்புகளை திடமாக எதிர்கொண்டுள்ளனர். ஆனால் சிக்கிம் மாநிலத்துக்கு சுற்றுலா நிமித்தம் வந்த பயணிகள், நிலச்சரிவு அபாயங்கள் மத்தியில் அரண்டு போயுள்ளனர்.

தொடர்ந்து பெய்யும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இதனிடையே அங்கு நிலச்சரிவுகளில் சிக்கி 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், டீஸ்டா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இது தாழ்வான சிங்டம் நகரத்தில் வசிப்பவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம்ச்சி மாவட்டத்தில், பெருக்கெடுத்து வரும் தண்ணீர் மெல்லி ஸ்டேடியத்தை மூழ்கடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் நிலச்சரிவுக்குப் பிந்தைய நிலைமையை மதிப்பிடுவதற்கான கூட்டம் மின்டோகாங்கில் நடைபெற்றது. சிக்கிம் சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் சி.எஸ்.ராவ், ’சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் மீட்கும் நடவடிக்கைகளை தலைமைச் செயலர் அலுவலகம் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.

சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதியளித்த ராவ், தொடரும் பேரிடர்களுக்கு மத்தியில் உள்ளூர் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார். முகாம்களில் அடைக்கலமாகி இருக்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் போதுமான உணவுப் பொருட்கள் இருப்பு இருப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

சிக்கிம் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் சொத்துக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலை இணைப்பு, மின்சாரம், உணவு விநியோகம் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆகியவை சீர்குலைந்துள்ளன. எனவே அவற்றை இயல்புக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளிலும் மாநில ஈடுபட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here