வீல்சேரில் போப் பிரான்சிஸ்.. பார்த்ததுமே பிரதமர் மோடி செய்த செயல்.. ஜி7 மாநாட்டில் நெகிழ்ச்சி

ரோம்: பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார். இந்த மாநாட்டில் போப் பிரான்சிஸ் பங்கேற்றார். இந்த வேளையில் வீல் சேரிந்த வந்த போப் பிரான்சிஸை பார்த்ததும் பிரதமர் மோடி செய்த செயல் அனைவரையும் கவர்ந்தது . இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 240 தொகுதிகளில் பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ‛ஹாட்ரிக்’ முறையில் ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து 3ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் தான் 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக இத்தாலிக்கு பயணம் செய்துள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் அங்கு சென்றுள்ளார்.

ஜி7 என்ற கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் இந்தியா இடம்பெறாத நிலையில் உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி விடுத்த அழைப்பில் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். ஒவ்வொரு முறை நடக்கும் ஜி7 மாநாட்டுக்கு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் ஜி7 உச்சி மாநாட்டுக்கான இத்தாலியின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அபுலியா நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த ஜி7 மாநாட்டில் போப்பாண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார்.

ஜி7 மாநாட்டில் இதுவரை உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் முதல் முறையாக மதம் சார்ந்த தலைவரான போப்பாண்டவர் பங்கேற்றார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு, அடுத்தடுத்த ஆபரேஷன் உள்ளிட்டவற்றால் போப் பிரான்சிஸ் வீல்சேரில் வந்து பங்கேற்றார்.

இந்த வேளையில் வீல்சேரில் வந்த போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்தார். போப் பிரான்சிஸை பார்த்தவுடன் பிரதமர் மோடி கட்டியணைத்து ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். மேலும் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். இந்த வேளையில் பிரதமர் மோடி, போப் பிரான்சிஸை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜி7 மாநாட்டின் ஒருபகுதியாக போப் பிரான்சிஸை சந்தித்தேன். மக்களுக்கு சேவையாற்றுவது மற்றும் பூமியை சிறந்ததாக மாற்றும் நோக்கிலான அவரது அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். இந்த வேளையில் இந்தியா வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி போப் பிரான்சிஸை சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, போப் பிரான்சியை சந்தித்து இருந்தார். முன்னதாக இந்த மாநாட்டில் போப் பிரான்சிஸ் பேசினார். அப்போது, ‛‛ஏஐ எனும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் டெக்னாலஜியை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here