86% இந்திய பணியாளர்கள் வேலையில் போராடுகிறார்கள் – Gallup 2024 ஆய்வில் தகவல்

இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 14% ஊழியர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதை உணர்வதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வேலைக்கு செல்பவர்களில் 86% பேர் தாங்கள் போராடுவதாகவோ அல்லது துன்பப்படுவதாகவோ உணர்வதாக ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

Gallup 2024 ஸ்டேட் ஆஃப் தி க்ளோபல் ஒர்க்ப்ளேஸ் என்ற நிறுவனம், உலகெங்கிலும் உள்ள ஊழியர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் ஊழியர்களின் பதிலை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

செழித்து வளர்கிறோம், போராடுகிறோம் மற்றும் துன்பப்படுகிறோம் என்பனவாகும். இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் ஒரு சிக்கலான மனநிலையில் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது வேலைக்கு செல்பவர்களில் 86% பேர் தாங்கள் போராடுகிறோம் அல்லது துன்பப்படுகிறோம் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர்.

செழித்து வளர்கிறோம் என்பது, தங்களுடைய தற்போதைய வாழ்க்கை நிலையை 7 அல்லது அதற்கு மேல் மதிப்பீடு செய்தவர்களும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர்களும் வளர்ந்து வருகிறோம் என்ற நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

போராடுகிறோம் என்பது அதிகரித்த மன அழுத்தம் மற்றும் நிதிக் கவலைகளுடன், அவர்களின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து நிச்சயமற்ற அல்லது அவநம்பிக்கை கொண்ட நபர்களை குறிக்கிறது. துன்பப்படுகிறோம் என்பது அவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையை 4 அல்லது அதற்கு மேல் மோசமானதாக மதிப்பீடு செய்தவர்களும் மற்றும் எதிர்காலத்திற்கான அவ நம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள் ஆகும்.
மேலும், தங்கள் வாழ்க்கை மற்றும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையற்றவர்களாகவும், பெரும்பாலும் அடிப்படைத் தேவைகள் இல்லாதவர்களாகவும், கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலை அனுபவிப்பவர்களைக் குறிக்கிறது. தெற்காசியாவில் மிகக் குறைந்த சதவீதம் பேர் மட்டுமே செழிப்பான பணியாளர்களாக உள்ளனர். தெற்காசியாவிலிருந்து பதிலளித்தவர்களில் 15% பேர் மட்டுமே செழிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது உலக சராசரியை விட 19 சதவீத புள்ளிகள் குறைவாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெற்றிகரமானோரின் விகிதத்தில், இந்தியா 14% மட்டுமே செழிப்பு விகிதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது, நேபாளத்திற்கு அடுத்தபடியாக 22%-ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
தினசரி உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, பதிலளித்தவர்களில் 35% இந்தியர்கள் தினசரி கோபத்தை அனுபவிப்பதாக தெரிவித்தனர், இது தெற்காசியாவிலேயே அதிகமாகும். இந்தியாவிலிருந்து பதிலளித்தவர்களில் 32% மட்டுமே தினசரி மன அழுத்தம் ஏற்படுவதாக கூறியுள்ளனர். இது இலங்கையின் 62% மற்றும் ஆப்கானிஸ்தானின் 58% உடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவாகவே உள்ளது.
இருந்தபோதிலும், இந்தியா 32% என்ற அதிக சதவீத பணியாளர் ஈடுபாட்டை கொண்டுள்ளது, இது உலகளாவிய சராசரியான 23%ஐ விட கணிசமாக அதிகமாகும். பல இந்திய பணியாளர்கள் நல்வாழ்வின் அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது, கணிசமானோர் தங்கள் பணியில் ஈடுபாடும், உறுதியும் கொண்டுள்ளனர் என்பதை இது குறிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here