ஜார்ஜ் டவுன், காட் லெபு மக்கலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், RM309,000 மதிப்புள்ள கிட்டத்தட்ட 100 கிலோகிராம் கஞ்சாவை தனது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
46 வயதுடைய சந்தேக நபர், கடந்த வெள்ளிக்கிழமை வாடிக்கையாளருக்கு போதைப்பொருளை வழங்குவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்டதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அமாட் கூறினார்.
“ஆரம்பகட்ட ஆய்வில், அவரிடம் 6,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு கிலோ எடையுள்ள கஞ்சாவின் பதப்படுத்தப்பட்ட இரண்டு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அப்போது சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி காரை போலீசார் சோதனையிட்டதில், பயணிகள் இருக்கையில் 4 பிளாஸ்டிக் பெட்டிகள் இருப்பது தெரியவந்தது என்றார்.
“அதில் RM303,000 மதிப்புள்ள 98 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர், மேலும் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் போதைப்பொருட்களை சேமித்து வைக்க காரை பயன்படுத்தியது தெரியவந்தது” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
குறித்த சந்தேக நபருக்கு 12 குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்காக அவர் அவரும் வெள்ளிக்கிழமை வரை போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று ஹம்சா கூறினார்.