16 வகை செல்வங்களையும் அள்ளித் தரும் புதன்கிழமை பிரதோஷம்

சிவபெருமானை வழிபட்டு அவரின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக பிரதோஷம் கருதப்படுகிறது. சிவனின் அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் எட்டு வகையான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. எவர் ஒருவர் 11 பிரதோஷங்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவ பெருமானை வழிபடுகிறாரோ, அவர்களின் துன்பங்கள் அனைத்தும் கரைந்து போகும். அனைத்து விதமான நலன்களும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாதந்தோறும் பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு பிறகு வரும் திரியோதசி திதியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். ஒவ்வொரு கிழமை, மாதத்திலும் வரும் பிரதோஷத்திற்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. இவற்றில் திங்கள் மற்றும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷங்கள், ஐப்பசி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் வரும் பிரதோஷ்கள் ஆகியன மிகவும் முக்கியமானதாகவும், தவற விடக் கூடாத அற்புதமான பிரதோஷ நாட்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

அப்படி புதன்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் முக்கியமானதாகும். இந்த நாளில் விரதம் இருந்து, சிவ தரிசனமும், சிவ வழிபாடும் செய்பவர்களுக்கு 16 வகையான செல்வங்களையும், அருளையும் சிவ பெருமான் வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று சிவனையும், நந்தியையும் வழிபட்டு விரதத்தை துவங்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து செல்வ தடைகளையும் நீக்கி அருள வேண்டும் என ஈசனிடம் மனமுருக வேண்டிக் கொண்ட விரதத்தை துவக்க வேண்டும்.

கோவிலை வலம் வரும் போது ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே சுற்றி வர வேண்டும். பகலிலும் மனதிற்குள் பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மாலையில் கோவிலில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்த கொண்டு, சிவன் மற்றும் நந்திக்கு நடக்கும் அபிஷேகம் மட்டும் பூஜையில் கலந்த கொள்ள வேண்டும். அபிஷேகத்திற்கு நம்மால் முடிந்த பொருட்களையும் வாங்கிக் கொடுக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட வேண்டும்.

சிவ புராணம் படித்து, சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ர மந்திரத்தை ஜபம் செய்யலாம். முடியாதவர்கள் அதை ஒலிக்க விட்டு கேட்கலாம். புதன் கிழமையில் வரும் பிரதோஷத்தில் இந்த முறையில் விரதமர் இருந்த ஈசனை வழிபட்டால் மனம் தெளிவடையும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். வேண்டிய வரங்கள் கிடைக்கும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த புதன் பிரதோஷம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி வருகிறது. இது ஆனி மாத வளர்பிறை பிரதோஷம் என்பதால் கூடுதல் சிறப்புடையதாகும்.

பிரதோஷ மந்திரம்:

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here