சாம்பாரில் செத்துக் கிடந்த எலி; கடையை மூடி முத்திரை வைத்த அதிகாரிகள்

அகமதாபாத்:

சாம்பாரில் எலி மாண்டு கிடந்ததையடுத்து, உணவகத்தை மூடி முத்திரை வைக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் பெயர்பெற்ற இந்த உணவகத்தில் அண்மையில் சாப்பிடச் சென்ற ஒரு குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தங்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் எலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.

அதன் தொடர்பில், அகமதாபாத் மாநகராட்சிக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அந்த உணவகத்திற்குச் சென்று சோதனையிட்ட அதிகாரிகள், அங்கு சுகாதாரமற்ற சூழலில் உணவு சமைப்பதைக் கண்டுபிடித்தனர். சுத்தம், சுகாதாரம் தொடர்பில் பல விதிமுறைகள் மீறப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

அதனையடுத்து, விளக்கம் கேட்டு அந்த உணவக உரிமையாளருக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அத்துடன், அதிகாரிகள் அந்த உணவகத்தை மூடி, முத்திரையும் வைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அகமதாபாத் மாநகராட்சியின் உணவுப் பாதுகாப்பு அதிகாரி பவின் ஜோஷி உணவகங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, சாம்பாரில் எலி மிதக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக இந்தியாவில் உணவுவகைகளில் மனித விரல், பூரான் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அமேசான் அனுப்பிய பொட்டலத்தில் உயிருடன் பாம்பு ஒன்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here