நேற்று வடகொரியா.. இன்று வியட்நாம்! தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புதின் விசிட்.. அமெரிக்கா சந்தேகம்

ஹனோய்: நேற்று வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்த நிலையில், இன்று வியட்நாம் சென்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். புதினின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பயணம் குறித்து அமெரிக்கா சந்தேகம் கிளப்பியிருக்கிறது.

உலக அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்து வருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை மீண்டும் வலுவாக நிலை நிறுத்திக்கொள்ளும் பணியில் ரஷ்யா இறங்கியிருக்கிறது. எனவே ரஷ்ய அதிபர் புதின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

நேற்று வடகொரியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்-ஐ சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. காரணம் கிம் ஜோங் வெளிப்படையாகவே ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிரான லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புதின் தற்போது வியாட்நாமுக்கு சென்றிருக்கிறார். வியட்நாம் தலைநகர் ஹனோயில் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை அவர் இன்று சந்திக்கிறார். வியட்நாமுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 1950லிருந்து நட்பு நீடித்து வருகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக வியட்நாம் ‘மூங்கில் ராஜதந்திரத்தை’ கடைபிடித்து வருகிறது. அதாவது, இது மற்ற நாடுகளுடன் கொள்ளும் உறவு வலுவாகவும், உறுதியாகவும் இருக்கும். ஆனால் நெகிழ்வு தன்மையுடனும் இருக்கும்.

இப்படியான உறவைதான் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வியட்நாம் கடைபிடித்து வருகிறது. தொழில்நுட்ப துறையில் வியட்நாமின் வளர்ச்சி, தற்போது ரஷ்யாவை அந்நாட்டின் பக்கம் ஈர்த்திருக்கிறது. எனவே ரஷ்யா வியட்நாமுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு இன்று நடந்திருக்கிறது.

தற்போது உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு பின்னணியில் ஆயுத பரிமாற்றங்கள் இருக்கலாம் என்று அமெரிக்க ஆதரவு நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா இது குறித்து வெளிப்படையாகவே எச்சரித்திருந்தது. உக்ரைன் போரில் ஆயுதங்களை வாங்கவே புதின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று கூறியிருந்தது. இப்படி நடந்தால் போர் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here