வீடற்றவர்களை அதிகம் கொல்லும் வெப்ப அலை; டெல்லியில் 9 நாட்களில் 190 பேர் பலி

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெப்ப அலைக்கு பலியாவோரில் 80 சதவீதத்தினர் வீடற்றவர்கள் என அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் வேதனை அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த கோடையில் வரலாறு காணாத வெயில் மற்றும் வெப்பநிலையுடன் இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது.

வட இந்தியாவை அலைக்கழித்து வரும் வெப்ப அலை, தேசத்தின் தலைநகர் டெல்லியை அதிகம் பாதித்துள்ளது. டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, வட இந்தியா முழுவதும் பரவிவரும் வெப்பம், டெல்லியில் ஜூன் 11 மற்றும் 19 க்கு இடையில் 190 வீடற்றவர்களைக் கொன்றுள்ளது.

இந்தத் தரவு, உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மண்டல நெட்வொர்க்கிலிருந்து பெறப்பட்டது. மேலும் ’வீடற்ற மற்றும் வீட்டு உரிமைகளுக்கான தேசிய மன்றம்’ என்ற அரசுசாரா அமைப்பின் உறுப்பினரான சுனில் குமார் அலேடியா என்பவரால் அட்டவணைப்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பின் ஆய்வில், வெப்ப அலையால் இறந்தவர்களின் உரிமை கோரப்படாத உடல்களில் 80 சதவீதம் பேர் வீடற்றவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாதமும் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலைத் துறையின் தரவுகளின்படி, 50 ஆண்டுகளில் இல்லாத வெப்பமான இரவை நேற்றிரவு டெல்லி அனுபவித்தது. அதாவது டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதனையடுத்து டெல்லியின் அதிகரிக்கும் வெப்ப அலை பாதிப்புகளை குறைக்க மற்றும் தவிர்க்க, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைகள் பலவும் பரப்பப்பட்டு வருகின்றன.

அவற்றில் முக்கியமானதாக, தாகம் எடுக்காவிடிலும் தொடர்ந்து நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பயணம் செய்யும்போது எப்போதும் போதிய தண்ணீரை உடன் எடுத்துச் செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் அலைவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓஆர்எஸ், லஸ்ஸி, எலுமிச்சை ஜூஸ் மற்றும் மோர் போன்ற நீர்ச்சத்து மிக்கவற்றை உட்கொள்ளவும், உடலில் நீரிழப்பை ஏற்படுத்து மது மற்றும் காஃபின் கலந்த பானங்களைத் தவிர்க்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here