900 ஹஜ் பயணிகள் பலி.. அடுத்தடுத்து உயிரை குடிக்கும் கொடூர வெயில்.. சவுதி அரேபியாவில் பெரும் சோகம்

ரியாத்: காலநிலை மாற்றம் காரணமாக சவுதியில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்றவர்களில் 900க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் கடும் வெயில் மற்றும் வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில், ஹஜ் புனித யாத்திரை சென்றவர்களில் 900 பேர் வெயில் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ஹஜ் புனித பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாக இருக்கிறது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொண்டு விட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் குறிக்கோள் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஹஜ் புனித யாத்திரையில் உலகம் முழுவதும் இருந்து 18 லட்சம் இஸ்லாமியர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை சவுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் புனித பயணத்திற்கு வந்த யாத்திரிகள் சிலர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 17ம் தேதி சவுதியில் 51.8 டிகிரி செல்சியஸுக்கு (125 டிகிரி ஃபாரன்ஹீட்) மேல் வெயில் பதிவாகியிருந்தது. இப்படியாக அதிகப்படியான வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக, யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது பயணிகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய தங்கும் இடங்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் வெயிலின் தாக்கத்தால் 19 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 68 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று உயிரிழப்புகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 30 ஆண்டுகளில், ஹஜ் பயணத்தின்போது நெரிசல்கள், தீ விபத்து, வெயிலின் தாக்கம் உள்ளிட்டவற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த ஆண்டும் உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, உயிரிழந்தவர்கள் ஜோர்டன் மற்றும் ஈரானை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் 17 பேரை காணவில்லை. உயிரிழந்தவர்களில் சிலரின் உடலை சவுதியிலேயே அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறது.

முன்னதாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் வெப்ப நிலை கடுமையாக உயரும் என்று சவுதி நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சவுதி தேசிய வானிலை மையத்தின் தலைவர் அய்மன் குலாம் இது குறித்து, “இந்த ஆண்டு மெக்கா மற்றும் மதீனாவில் சராசரி வெப்பநிலை 1.5 முதல் 2 டிகிரி வரை அதிகரிக்கும். சராசரி அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸும், ஈரப்பதம் 25% எனவும் இருக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 18 லட்சம் யாத்திரிகள் புனித பயணத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். இதில் பலருக்கு வெப்ப நோய்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் யாத்திரிகளின் வருகை குறையவில்லை. வெயில் உயிரிழப்புக்கு முக்கியமான காரணமாக இருந்தாலும், ஹஜ் பயணத்தின்போது வழிமுறைகளை பின்பற்றாததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழிகாட்டு முறையின்படி பயணம் மேற்கொள்பவர்களுக்கு உரிய அங்கிகாரம் தரப்படுகிறது. அவர்களுக்கு தங்குமிடம், உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுகிறது. ஆனால், பலர் வழிமுறைகளை பின்பற்றாமல் ஹஜ் பயணம் மேற்கொள்வதால் நெரிசல் அதிகரிக்கிறது, எனவே உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை அனைவருக்கும் கிடைப்பதில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த சில 10 ஆண்டுகளில் சவுதியின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2014ம் ஜூன் மாதத்தில் பதிவான வெயிலை விட, இந்த ஆண்டு 0.4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த வெப்பநிலை உயர்வு தற்போது நிகழும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here