இல்லாத போதும் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் மாபெரும் கவிஞனாக மனங்களில் சிம்மாசனமிட்டு வாழ்கிறார் கண்ணதாசன்

செய்தி :ராமேஸ்வரி ராஜா
படங்கள் : பி.மலையாண்டி

“கண்ணதாசனுடைய கவிதைகள் மொழியை வளர்த்தது”

“நல்ல தமிழை கேட்பதற்கு இன்றைய தலைமுறை தயாராக இருக்கிறது”

கண்ணதாசன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் பேச்சு.

கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் அவரை புரிந்து கொண்டார்களோ இல்லையோ, இன்று அவர் இல்லாத போதும் தமிழ் கூறும் நல்லுலகம் இந்த கவிஞனுடைய ஆற்றலையும், அவருடைய தமிழ் மொழி புலமையும் கொண்டாடும் ஒரு மாபெரும் கவிஞனாக மக்களுடடைய மனங்களில் நிரந்தர சிம்மாசனமிட்டு வாழ்கிறார் என மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் புகழாரம் சூட்டினார்.

கண்ணதாசனுடைய கவிதைகள் மொழியை வளர்த்தது. பண்பாட்டை வளர்த்தது. கணவன் மனைவி உறவுகளின் மரியாதையை சொன்னது.இப்போதெல்லாம் இது மாறி வருகிறது. புதிய தலைமுறைக்கு இதனைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

திரளானோர் கூடியிருக்கும் இந்த சபையில் புதிய தலைமுறை அதிகமாக கூடியிருக்கிறார்கள் என்பது நல்ல தமிழை கேட்பதற்கு இன்றைய தலைமுறை தயாராக இருக்கிறது என்பதை காட்டுகிறது என ஜூன் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாம்பூர் ஸ்ரீதண்டாயுதபாணி ஆலய நகரத்தார் மண்டபத்தில் காலை 10.30 மணி தொடக்கம் நடைபெற்ற கண்ணதாசன் விழாவிற்கு தலைமையேற்று பேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் மலேசிய மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே கண்ணதாசன் விழா நடத்தப்படுகிறது. இன்று 49 ஆம் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

மக்கள் அரங்கம் நிறைந்து கூடியிருப்பதானது இந்த விழாவை அடிக்கடி நடத்தவேண்டும் எனும் ஆவலைத்தூண்டுகிறது எனவும் சரவணன் சொன்னார்.

மங்கல நாதஸ்வரத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து, பாடகர் எம்.எஸ். பிரிட்டோவின் குரலில் திருப்புகழ், கவிஞர் சீராகியின் கவிதை ஆகியவை மெய்சிலிர்க்கும் வகையில் படைக்கப்பட்டது.

அறவாரியத்யின் செயலாளர் கரு. கார்த்திக்கின் வரவேற்புரையைத் தொடர்ந்து டி.எம்.எஸ்.குணா, எஸ்.பி.மோகன் தாரணி தண்டபாணி, ஆர்பிஎஸ் கலைமணி ஆகியோர் கண்ணதாசன் எழுதிய பாடல்களை பாடினர்.

இருதய மருத்துவர் டத்தோ டாக்டர் வள்ளியப்பன் கதிரேசன் ‘கண்ணதாசன் பாடல்களில் சைவ சித்தாந்தம்’ எனும் தலைப்பில் சிறப்புப் பேச்சு முதல் பகுதியாக நடைபெற்றது. மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி முறையே குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கப்பட்டது. இதுவரையில் 246 கலைப்படைப்பாளர்களை கௌரவித்துள்ளது கவிஞர் விழா.

அதுபோல இந்த ஆண்டும் நடைபெற்ற இந்த சிறப்பு அங்கத்தில் பாவலர் கவிஞர் முரசு நெடுமாறன் , பாடகர் எம்.எஸ்.பிரிட்டோ, சுங்கைபட்டாணி கலைஞர் கலைமாமணி ஆர்.பி.எஸ். கலைமணி, பாடகர் இசைக்கலைஞர் தண்டபாணி, காவல்துறை முன்னாள் ஆணையர் டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கோமதி தெய்வீகன் ஆகிய ஐந்து பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து தமிழகத்துப் பேச்சாளர்களான முனைவர் தேவி லட்சுமி ‘பாட்டுடைத் தலைவன்’ எனும் தலைப்பிலும், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ‘ஊரெங்கும் நின் பாட்டு’ எனும் தலைப்பிலும், வழக்கறிஞர், இலக்கியச்சுடர் த.ராமலிங்கம் ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here