உலகம் உற்றுநோக்கும் இளம் கால்பந்து வீரர்!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை தொடரில், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் 16 வயது சிறுவன்.யார் அவர் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

தொடர்ந்து கால்பந்து போட்டிகளை கவனித்து வருவோருக்கு இந்த 16 வயது பையன் தெரிந்த முகமே. ஆனால், உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து போன்ற போட்டிகளை மட்டுமே பார்க்கும் சிலபல இந்திய ரசிகர்களுக்கு அவர் புதிய முகமே.

மொராக்கோ தந்தைக்கும், ஈக்வடார் கினியன் (Equatorial Guinean) தாய்க்கும் ஸ்பெயினில் 2007 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி பிறந்தவர்தான் இந்த லமின் யமால். 7 வயதில் பார்சிலோனாவுக்கு அவர் குடும்பம் இடம்பெயர்ந்தது. மகுடியின் வாசிப்புக்கு அடங்கும் பாம்பு போல, யமாலின் கால்களுக்குள் பந்து கட்டுப்பட, அவரின் திறமையை மெருகேற்றும் வகையில் பார்சிலோனா இளைஞர் அகாடமியில் பட்டை தீட்டப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டின் 15 வயதுகுட்பட்டோர், அணியில் 2021ல் அறிமுகமான யமால், அடுத்த இரண்டே ஆண்டுகளில், ஸ்பெயின் தேசிய அணிக்காக களம் இறங்கினார். இதேபோல பார்சிலோனா “பி” அணிக்காகவும் களம் கண்ட யமால், பல்வேறு சாதனைகளைப் படைத்தார். La Liga தொடரில் விளையாடிய மிக இளைய வீரர். பார்சிலோனா அணிக்காக கோல் அடித்த இளம் வீரர் என சாதனைகளை தொடர்ந்த யமால், தற்போது மிக இளம் வயதில் யூரோ கோப்பையில் விளையாடிய வீரர் என்ற மைல் கல்லையும் எட்டியுள்ளார். குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது யமாலின் வயது 16 ஆண்டுகள் 388 நாட்கள் மட்டுமே.

அதிவேகமான டிரிப்லிங், எதிரணியை துச்சமென மதித்து வேகமாக முன்னேறும் திறன், துல்லியமான பாஸ் என மைதானத்தில் துருதுருவென வலம் வரும் இச்சிறுவனை கால்பந்து உலகமே வியந்து பார்க்கிறது. யூரோ கால்பந்து தொடங்குவதற்கு முன்பு, பேட்டியளித்த யமால், பள்ளி Home Work-ஐ ஜெர்மனிக்கு எடுத்து வந்துள்ளதாக கூறியது வைரலானது. கட்டாய பள்ளியின் கடைசி வகுப்பை படித்து வரும் யமால் சின்சியர் மாணவனாக ஆன்லைனில் படித்து வருகிறார்.

ஸ்பெயின் அணிக்கு பல வெற்றிகளை தர காத்திருக்கும் இந்த இளம் காளையை, அடுத்த மெஸ்ஸி என்கிறது கால்பந்து உலகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here