2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி… இந்தியாவையே அதிரவைத்த கிரிமினல் மிட்டல்

காவலர்களின் ரெக்கார்ட்களில் ‘இந்தியன் சார்லஸ் சோப்ராஜ்’ என்றும் அழைக்கப்படும் தானி ராம் மிட்டல், இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சட்டப் பட்டதாரி, கையெழுத்து நிபுணர், வரைபடவியல் நிபுணர் என நம்பப்படும் மிட்டல், தனக்கு ஏராளமான தகுதிகள் இருந்தபோதிலும் திருட்டு வாழ்க்கையைத் தனது வாழ்வாதாரமாக கொண்ட ஒரு நபராக இருந்துள்ளார்.

ஏறக்குறைய 60 ஆண்டுகளாக மிட்டல் ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றவியல் வரலாற்றைக் குவித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், மிட்டல் இதுவரை அதிக எண்ணிக்கையிலான கைதுகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட கார்களைத் திருடியுள்ளார். முதன்மையாக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டப்பகலில் கார்களைத் திருடுவது அவரது வழக்கமான பாணியாக இருந்துள்ளது.

ஜனவரி மாத தொடக்கத்தில், டெல்லியின் பாஸ்சிம் விஹாரில் கைது செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ஒருமுறை மிட்டல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஷாலிமார் பாக் பகுதியில் இருந்து திருடிய மாருதி எஸ்டீம் காரை ஸ்கிராப் டீலருக்கு விற்க முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், ஆன்டி-ஆட்டோ தெஃப்ட் சிஸ்டம் இல்லாத பழைய வாகனங்களை குறிவைத்து திருடுவதை மிட்டல் ஒப்புக்கொண்டார். பின்னர், மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டபோது தனது நீதிபதி நாடகத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம் மிட்டல் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி பல கிரிமினல் குற்றங்களுக்கு பெயர்போன மிட்டல், கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here