திகார் சிறையிலிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் மீண்டும் கைது

திகார் சிறையில் அடைபட்டிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலை சிபிஐ இன்று அதிரடியாக கைது செய்தது. இதனையடுத்து கேஜ்ரிவாலை தொடர்ந்து சிறையிலேயே முடக்க சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ இன்று கைது செய்தது. இதற்கிடையில், தனது ஜாமீன் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து புதிய மனுத்தாக்கல் செய்ய அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சிபிஐ

திகார் சிறையில் கேஜ்ரிவாலை கைது செய்ததும், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அவரை சிபிஐ அழைத்து வந்தது. கேஜ்ரிவால் மனைவி சுனிதா கேஜ்ரிவாலும் உடனிருந்தார். கேஜ்ரிவால் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் விவேக் ஜெயின், திகார் சிறையில் கேஜ்ரிவாலை சிபிஐ விசாரித்தது குறித்து தான் ஊடகங்கள் மூலம் மட்டுமே அறிய நேர்ந்தது என கவலை தெரிவித்தார்.

கேஜ்ரிவாலுக்கு எதிரான சிபிஐ நடவடிக்கையை அவரது வழக்கறிஞர் கடுமையாக விமர்சித்தார். கேஜ்ரிவாலுக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறும் அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார். சிபிஐ சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.பி.சிங், தேர்தலுக்கு முன்பே சிபிஐ அவரைக் கைது செய்திருக்க வேண்டியது என்றும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்படி, எவருக்கும் தங்களுடைய நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டிய அவசியம் சிபிஐ-க்கு இல்லை என்றும் சிங் வாதிட்டார்.
அரவிந்த் கேஜ்ரிவால்

முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம் கேஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்தது. விசாரணை நீதிமன்றம் தடைசெய்யப்பட்ட உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 45-ன் இரட்டை நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் திருப்தியை பதிவு செய்திருக்க வேண்டும் என்றது.

கலால் கொள்கை வழக்கு தொடர்பாக திகார் சிறையில் உள்ள கேஜ்ரிவாலை நேற்றிரவு வரை சிபிஐ விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தது. தற்போதைய சிபிஐ கைது மூலமாக, கேஜ்ரிவாலை சிறையிலேயே முடக்க மோடி அரசாங்கம் மோசமான தந்திரங்களை முன்வைப்பதாக கேஜ்ரிவால் வழக்கறிஞர் பின்னர் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here