யூரோ 2024 கால்பந்து : இத்தாலி, ஸ்பெயின் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்…

யூரோ 2024 கால்பந்து தொடரின் குரூப் ‘பி’ பிரிவில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

இத்தாலி மற்றும் குரோஷியா இடையேயான லீக் போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் 55ஆவது நிமிடத்தில் குரோஷியா அணியின் லூகா மோட்ரிச் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

38 வயதாகும் லூகா மோட்ரிச் யூரோ வரலாற்றில் கோல் அடித்த மூத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இத்தாலி அணியினர் போராடிய நிலையில், வியூகங்கள் கைக்கொடுக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டமும் முடிந்த நிலையில், 8 நிமிட கூடுதல் நேரத்தில் குரோஷியா வெற்றி உறுதி என்றிருந்த வேளையில், கடைசி நிமிடத்தில் இத்தாலியின் (Mattia Zacagni) மத்தியா ஜக்காக்னி கோல் அடித்து குரோஷியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் போட்டி சமனில் முடிந்த நிலையில், இத்தாலி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் பி பிரிவில் மற்றொரு போட்டியில் ஸ்பெயின் மற்றும் அல்பேனியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் ஃபெரான் டோரஸ் கோல் அடித்தது அந்த அணிக்கு வெற்றியாக அமைந்தது.

பின்னர் முழு நேர ஆட்ட முடிவில் அல்பேனியா அணி கோல் அடிக்க முடியாததால் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் தொடரில் இருந்து அல்பேனியா வெளியேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here