வேலையில்லாததால் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு கமிஷன் பெறும் இளைஞர்கள்

பனாஜி: கோவாவில் வேலை இல்லாத பல இளைஞர்கள் தங்களது வங்கிக் கணக்குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.கோவாவில் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் கிடைத்த சிறிய சிறிய வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அது போன்ற வேலையில்லாத இளைஞர்களை சில மோசடி பேர்வழிகள் குறி வைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இணைய மோசடி கும்பல் அவர்களை ஏமாற்றி வருகிறது.அவர்களும் தங்களது வாழ்வாதாரத்திற்காக வங்கிக் கணக்குகளை இது போன்ற கும்பலுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ரூ 1 லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கு அந்த மோசடி கும்பல் 1000 ரூபாயை கமிஷனாக வழங்கியதாம்.

காசோலை புத்தகம் உள்பட வங்கிக் கணக்கின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறார்களா என்பதை அந்த மோசடி கும்பல் உறுதி செய்துக் கொள்கிறது.சில நேரங்களில் மோசடி பேர் வழிகள் வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் அவருடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை அவர்களையே திரும்பப் பெறச் சொல்கிறார்கள். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் தனது கமிஷனை எடுத்துவிட்டு மீதித் தொகையை மோசடியாளரிடம் வழங்குகிறார்கள். சியோலிம் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் ரூ 45 லட்சத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்ததாக கொடுத்த புகாரை விசாரித்த போது 20 முதல் 25 வயதுக்குள்பட்ட பல இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்த தொகை மாற்றப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் வந்தது.

அந்த இளைஞர்களுக்கு தங்களது வங்கிக் கணக்கில் யார் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. எந்த இடத்திலிருந்து செய்கிறார்கள், மோசடி பணமா என்பது குறித்தும் எந்த தகவலும் தெரியாது. அது போல் ஒரு பெண் மருத்துவரிடம் ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை தருவதாக கூறி ரூ 90 லட்சம் மோசடி செய்யப்பட்டது. அதே போல் நகை வியாபாரி ஒருவரிடம் ரூ 2.5 கோடி அபேஸ் செய்யப்பட்டது. இந்த பணம் எல்லாம் இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு போடப்பட்டு பிறகு மோசடியாளர்கள் அவர்களது கமிஷனை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

இளைஞர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும் மோசடிக்கு துணை போகிறார்கள் என்பதால் அவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். எனவே யாரென்றே தெரியாதவர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பகிர்வதை தவிர்த்துவிட வேண்டும்.மோசடி நபர்கள் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அவர்கள் இதுகுறித்து காவல் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here