தொழிலாளர் உயர்வாழ்வாதாரமே இலக்கு 24 மணி நேர சமூக பாதுகாப்பு அவசியம்

பி.ஆர்.ராஜன்

மலேசியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் 2024 தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டதிருத்த மசோதாவுக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

நாடாளுமன்ற மக்களவையில் இதன் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் இ லீ வூயென், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் தொழிலாளர் நலன் காப்பதற்கு பெர்கேசோ முன்னெடுத்திருக்கும் பல்வேறு திட்டங்களை வரவேற்றனர்.

இத்திருத்தங்களானது தொழிலாளர் சமூகப் பாதுகாப்பைப் பன்மடங்காக உயர்த்தும் முயற்சியின் ஓர் அங்கமாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு மடானி அரசாங்கமும் கெசுமா (மனிதவளம்) அமைச்சும் ஆக்கப்பூர்வ மான திட்டங்களை வகுத்து வருகின்றன.

தொழிலாளர் வர்க்கத்தினரின் நால்வாழ்வை மேம்படுத்துவதற்குரிய இத்திட்டங்கள் புதிய சட்டதிருத்தத்தின் வழி மேலும் வலுப்பெறும் என்று இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

அதேசமயத்தில் ஒரு தரப்பு தொழிலாளர்கள் வேலைக்குப் பிந்திய காலகட்டத்தில் நிகழும் விபத்துகளுக்கும் பேரிடர்களுக்கும் சமூகப் பாதுகாப்பைப் பெற்றிருக்கவில்லை. விபத்து அல்லது பேரிடர் காலத்தில் ஏற்படக்கூடிய காயங்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு அவர்களுக்கு சக்திக்கு அப்பாற்பட்ட முறையில் பெரும் பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இந்நிலை கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று கெல்வின் இ குறிப்பிட்டார்.

நடப்புச் சூழ்நிலையில் வேலை நேரம் அல்லது வேலை தொடர்பான நடவடிக்கையின்போது ஏற்படக்கூடிய விபத்துகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் பணி நேரத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள், பேரிடர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் பணி நேரத்திற்குப் பிறகும் வெளியில் நிகழும் விபத்துகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குரிய அம்சங்களை இத்திருத்தங்கள் கவனத்தில் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

2023ஆம் ஆண்டில் மொத்தம் 63,199 விபத்துகள் பெர்கேசோவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 50 விழுக்காட்டினர் அல்லது 31,000 பேர் சாலையில் அல்லது வீட்டில் நிகழ்ந்த விபத்துகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் 2023இல் 82,876 விபத்துகள் பெர்கேசோவில் பதிவு செய்யப்பட்டன. இதில் 68,220 பேர் மட்டுமே தொழில் பேரிடர் உதவிகளைப் பெற்றிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 18 விழுக்காட்டினர் அல்லது 14,000 பேர் அந்த உதவிகளைப் பெறவில்லை. இதற்கு அவர்கள் பெர்கேசோ பாதுகாப்பைப் பெற்றிராததுதான் காரணம். இதனால் தேவையான உதவிகளைப் பெறுவதில் தோல்வி கண்டிருக்கின்றனர். இந்நிலை இனியும் தொடரக்கூடாது. இதற்கு மாற்றாக தற்போது நடைமுறையில் உள்ள பெர்கேசோ திட்டத்திற்கு ஈடான விபத்து பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அனைத்து மக்களுக்குமான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு பெர்கேசோ, மடானி அரசாங்கம் முழுவீச்சில் செயல்பட வேண்டும். 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கக்கூடிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு மடானி அரசாங்கமும் பெர்கேசோவும் முயற்சி செய்ய வேண்டும்.

2011- 2021 மலேசிய தேசிய சுகாதாரச் செலவு அறிக்கையில் விபத்துக்கான மருத்துவச் செலவுத் தொகை 78.22 பில்லியன் ரிங்கிட்டை கடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தொழிலாளர் தரப்பினர் 378 பில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாகப் பெற்றிருக்கின்றனர். இதுதவிர மலேசிய சமூகநல இலாகா வழி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மடானி அரசாங்கம் உதவித்தொகையை வழங்கி வருகிறது.

விபத்தில் சிக்கி உடற்பேறு குறைந்தவர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு 450 ரிங்கிட் ரொக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக அரசாங்கம் கிட்டத்தட்ட 595.6 மில்லியன் ரிங்கிட்டை செலவிட வேண்டியிருக்கிறது. இத்தொகை வருங்காலத்தில் இன்னும் கூடுதலாக அதிகரிக்கலாம்.

அதேசமயத்தில் பெர்கேசோ 2023ஆம் ஆண்டில் மட்டும் சிறுநீரக சுத்திகரிப்புக்கு 356.31 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது என்று கெல்வின் இ தெரிவித்தார்.

சந்தாதாரர்களுக்கு சுமை தராத ஒரு மாற்றுத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இத்திட்டத்தில் ஒரு முழுமையான பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக ஒரு சந்தாதாரர் 0.75 விழுக்காட்டு சந்தாவை கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

உதாரணமாக 2,000 ரிங்கிட் சம்பளம் பெறும் ஒரு தொழிலாளி கூடுதலாக 15 ரிங்கிட்டை பெர்கேசோ சந்தாவாகச் செலுத்த வேண்டும். இதன்மூலம் அந்த சந்தாதாரர் விரிவான பாதுகாப்பை பெற முடியும். மருத்துவம், தற்காலிக செயலிழப்பு, நிரந்தர செயலிழப்பு போன்றவற்றுக்காக அவர் மாதமொன்றுக்கு 1,072 ரிங்கிட்டை ஓய்வூதியமாகப் பெறுவார். மேலும் குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம், மரண சகாய நிதி, புனர்வாழ்வு நிதி, கல்விநிதி உட்பட பல்வேறு அனுகூலங்களை அவர்கள் பெறுவர்.

இவை அனைத்திற்கும் பெர்கேசோ முழுப்பொறுப்பு ஏற்கிறது. மடானி அரசாங்கம் பணத்தைச் சேமித்திடலாம் என்று கெல்வின் இ குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய சுங்கை சிப்புட் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம், தொழிலாளர் நலன்களைக் காத்திடுவதற்கு கெசுமா அமைச்சு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தொழிலாளர் நலன்கள், வாழ்வாதாரம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டதிருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அமைச்சு சமர்ப்பித்திருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் உள்ள ஏழ்மை நிலையை குறைப்பதற்கும் இச்சட்டதிருத்தம் பெரும் உதவியாக இருக்கும். இதுதவிர நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் பாதுகாப்புக்கு பெர்கேசோ வழங்கிடும் உதவிகள் இப்போதும் எதிர்காலத்திலும் தொடர்ந்து அதிகரிப்பதை இந்த சட்டதிருத்தம் உறுதி செய்யும் என்ற நிலையில் தாம் அதனை முழுமையாக ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here