கெந்திங் சுற்றுலாப் பேருந்து விபத்து: ஓட்டுநருக்கு உரிமம் இல்லை – போலீஸ்

கோலாலம்பூர்:

இன்று காலை 11 மணியளவில் கெந்திங் ஹைலேண்ட்ஸில் இருந்து கீழே செல்லும் வழியில் விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநருக்கு போக்குவரத்து விதிமீறல் குற்றப்பதிவுகளைத் தவிர, வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

32 வயதான பேருந்து ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவருக்கு பல்வேறு சாலைக்குற்றங்களுக்காக இதற்கு முன்னர் 27 போக்குவரத்து சம்மன்கள் வழங்கப்பட்டு இருந்து தெரியவந்ததாக பெந்தோங் காவல்துறைத் தலைவர் சசைஹாம் முகமட் கஹர் தெரிவித்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சீன நாட்டினர் முறையே Zhang Ping, 58, மற்றும் Wang Shuhong, 49 என அடையாளம் காணப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

விபத்துக்குள்ளானவர்களில் பேருந்து ஓட்டுநர், உதவியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியுடன் 18 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் அடங்குவர்.

இதில் காயமடைந்த ஆறு பேர் மற்றும் உயிரிழந்தவர்களது சடலங்களும் பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன, மேலும் காயமடைந்த 13 பேர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here