கோவிட்-19 உடன் வாழ்வது தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

நீலாய்:

கோவிட்-19 கிருமித்தொற்றுடன் வாழ்தல் எனும் நிலைப்பாட்டுக்கு நாடு மாறிவருவதால் அது தொடர்பில் புதிய விதிமுறைகளை சுகாதார அமைச்சு விரைவில் வெளியிடவிருக்கிறது.

கோவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் மறுஆய்வு செய்யப்பட்ட ‘ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் புரொசீஜர்ஸ்’ எனப்படும் நிலையான இயக்கச் செய்முறை குறித்த விவரங்களை அமைச்சு வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமட் கூறினார்.

வீட்டுக் கண்காணிப்பு உத்தரவு, முகக்கவசப் பயன்பாடு, கிருமித்தொற்று இடங்களைத் தெரியப்படுத்துதல் போன்றவையும் மறுஆய்வு செய்யப்படுவனவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமல்படுத்தும் தேதி முடிவானவுடன் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் அந்த விவரங்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவார் என்று அமைச்சர் சொன்னார்.

வீட்டுக் கண்காணிப்பு முன்னர் ஐந்து நாள்களாக இருந்தது. அறிகுறிகள் குறித்து ‘மைசெஜாத்ரா’ செயலி மூலம் தெரியப்படுத்துவதும் கட்டாயம். மறுஆய்வுக்குப் பிறகு அது மாறக்கூடும் என்றார் அவர்.

“கோவிட்-19 கிருமியை சளிக்காய்ச்சல் கிருமி உள்ளிட்ட இதர கிருமிகளைப் போன்றே கருதும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். பெருந்தொற்று என்ற நிலை மாறி அதனுடன் வாழப் பழகிக்கொள்ளுதல் என்ற நிலைக்கு மாற விரும்புகிறோம்,” என்று அவர் ஜூன் 27ஆம் தேதி அமைச்சின் ‘மலேசிய ஊட்டச் சத்து மாதம் 2024’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here