நான்கு மாதங்களாக சென்னையில் பதுங்கி இருந்த அல்-காய்தா தீவிரவாதி கைது

சென்னை: கடந்த நான்கு மாதங்களாக சென்னையில் பதுங்கி இருந்த அல் காய்தா தீவிரவாதியை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அல்-காய்தாவுக்கு ஆதரவான ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற அமைப்பு ஒன்று, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக அம்மாநில காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவு, சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களும் காவல்துறையினரும் அண்மையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மேற்குவங்க மாநிலத்தில் பதுங்கி இருந்த 21 வயதான ஹபிபுல்லா என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். விசாரணையின்போது தனது கூட்டாளிகள் பல்வேறு மாநிலங்களில் பதுங்கி உள்ளதாகவும் சமூக ஊடகங்கள் மூலம் ஏராளமான இளையர்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் ஹபிபுல்லா கூறியதாகத் தெரிகிறது.

புதிதாகச் சேரும் இளையர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி, வெடிகுண்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தனது நெருக்கமான கூட்டாளிகளில் இருவர் இதற்கு பொறுப்பு ஏற்றுள்ளதாகவும் ஹபிபுல்லா தெரிவித்ததாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஹபிபுல்லாவின் வலதுகரமான அஜ்கல் சிக்கினார். இதையடுத்து அவரிடமும் அதிரடிப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான் அன்சாரின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான அனோவர் ஷேக் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தொழிலாளியைப் போல் சென்னையில் வலம்வந்த அனோவர் ஷேக் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைப்பேசி இணைப்பின் மூலம் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் அண்மையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதிகளில் இருந்து புதிய கைப்பேசி சிம் அட்டையின் மூலம் அவர் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தனது உறவினரிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மேற்குவங்க மாநில சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் சென்னை காவல்துறையும் இணைந்தது. தேடுதல் வேட்டையின்போது சென்னையில் உள்ள தங்கு விடுதியில் அனோவர் சலவைத் தொழிலாளி போல் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்ததாகவும் பின்னர் தங்கு விடுதி ஒன்றில் சலவைத் தொழிலாளியாக பணி செய்ததாகவும் அனோவர் வாக்குமூலம் அளித்ததாக இந்து ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here