பிரிட்டிஷ் சட்டங்களுக்கு மாற்றாக இந்தியாவில் 3 புதிய சட்டங்கள் அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் திங்கட்கிழமை (ஜூலை 1) அறிமுகம் காண்கின்றன.

2023ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா 2023 (இந்திய நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய சாக்ஷயா அதினியம் 2023 (இந்திய சாட்சியச் சட்டம்) என்னும் அந்த சட்டங்களுக்கு அதிபர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள், விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்டு உள்ளன. குறிப்பாக, ‘ஸீரோ எஃப்ஐஆர்’ பதிவுமுறையும் காவல்துறையில் இணையம் வாயிலாக புகார்களைப் பதிவு செய்யும் முறையும் ஒருங்கிணைக்கப்படும்.

அத்துடன், அழைப்பாணைகள் குறுந்தகவல் போன்றவை மின்னணு முறையின்கீழ் அனுப்பப்படும். கொடூரமான குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த விதம் குறித்து காணொளி வாயிலாக விளக்குவதை புதிய சட்டம் கட்டாயமாக்குகிறது. புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுவதில் ஆர்வம் காட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டங்கள் நீதி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் என்றார். பிரிட்டிஷ் காலத்து சட்டங்கள் தண்டனை அளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

புதிய சட்டங்கள் இந்தியர்களால் இந்தியர்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு உள்ளன. இதன் மூலம் காலனித்துவ குற்றவியல் சட்டங்களுக்கு முடிவு கட்டப்படுகிறது என்றார் திரு ஷா. புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம், குற்றவியல் கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் அமைப்புகளில் 23 செயல்பாட்டு மாற்றங்களை செய்துள்ளது.

புதிய நடைமுறைக்கு மாறுவதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழங்குகிறது. திறன் மேம்பாட்டிற்காக, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் (பிபிஆர்டி) பயிற்சிகளை நடத்தியுள்ளது. அந்த வகையில் 250 பயிற்சி வகுப்புகள்,கருத்தரங்குகள், இணையவழி கருத்தரங்குகள் இதுவரை நடத்தப்பட்டு உள்ளன.

அவற்றில் 40,317 அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர். மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் காவல்துறை, சிறைத் துறை அதிகாரிகள் 5.65 லட்சம் பேர் உட்பட பல துறைகளைச் சேர்ந்த 5.84 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here